நோன்பு கஞ்சி அருந்தி வாக்கு சேகரித்த தென்காசி பாஜக வேட்பாளர் ஜான் பாண்டியன்! - John Pandian
Published : Mar 31, 2024, 11:30 AM IST
தென்காசி: தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்.19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால், பொதுமக்களிடம் பிரச்சாரத்தின் மூலம் வாக்கு சேகரிக்க அரசியல் கட்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், தமிழ்நாட்டில் தேர்தல் களம் அனல் பறக்கிறது.
அந்தவகையில், தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக கூட்டணியின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் ஜான் பாண்டியன், அத்தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கும் சென்று தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.
இதனிடையே, நேற்று (சனிக்கிழமை) கடையநல்லூர், கள்ளம்புலி, பொய்கை, வேலாயுதபுரம், சொக்கம்பட்டி சிங்கிலிபட்டி உள்ளிட்ட 10 மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது கடையநல்லூரில் உள்ள இஸ்லாமியர்களை சந்தித்த அவர், அவர்களுடன் அமர்ந்து நோன்பு கஞ்சி அருந்தி வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர், கடையநல்லூரில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான பெரிய பள்ளிவாசல் முன்பு இஸ்லாமியர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். தொடர்ந்து, கிருஷ்ணாபுரம் பகுதிக்கு சென்று வாக்கு சேகரித்த ஜான் பாண்டியன், புன்னையாபுரம் பகுதிக்கு செல்வதற்குள் இரவு 10 மணி ஆகிவிட்டதால், பிரச்சாரத்தை நிறுத்திக் கொண்டு, அங்குள்ள பொதுமக்களுடன் சிறிது நேரம் உரையாடிவிட்டு தன்னுடைய நேற்றைய பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.