75வது குடியரசு தினம்: அசோக சின்னத்தை பர்னிங் வுட் ஆர்ட் மூலம் தத்ரூபமாக வரைந்து அசத்திய இளைஞர்!
Published : Jan 26, 2024, 8:07 AM IST
மயிலாடுதுறை: தோப்புத்தெருவை சேர்ந்தவர் விக்னேஷ். வெளிநாடுகளில் புகழ்பெற்ற கலையாக விளங்கும் சன் லைட் பர்னிங் வுட் ஆர்ட் என்ற கலையை, ஆசியாவிலேயே முதல்முறையாக அதுவும் இந்தியாவில் அரங்கேற்றி வருகிறார். அதாவது மரக்கட்டைகளில் லென்ஸ் மூலம் சூரிய கதிர்களை ஒரே இடத்தில் குவித்து அதில் தோன்றும் நெருப்பு மூலம் ஓவியம் வரைவது தான் பர்னிங் வுட் ஆர்ட் எனப்படும்.
இளைஞர் விக்னேஷ் ஏற்கனவே விராட் கோலி, தோனி, சந்திராயன் 3 விண்கலம், கடல் கொள்ளையன் ஜாக் ஸ்பேரோ, கடவுள்கள் படங்கள், பெரியார், திருவள்ளுவர் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட ஓவியங்களை வரைந்து பிரபலமானவர். இந்த நிலையில் இவர் தஞ்சாவூரில் அமைந்துள்ள மத்திய அரசின் தென்னகக் கலை பண்பாட்டு மையத்தின் சார்பில், காரைக்காலில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் 25 மாணவ மாணவிகளுக்கு சன் வுட் பர்னிங் ஆர்ட் குறித்த பயிற்சி அளித்தார்.
அப்போது மூன்று நாட்களில் 15 மணி நேரத்தில் அசோக சக்கரத்தை தத்ரூபமாக வரைந்து அசத்தினார். இவரது கலை திறமையைக் கண்டு வியந்த மாணவர்கள், அவர்களும் சிறு சிறு ஓவியங்களை சூரிய ஒளியில் வரைய பழகினர். தற்போது குடியரசு தினத்தை முன்னிட்டு அசோக சின்னத்தை வரைந்து கவனம் எடுத்துள்ளார் இந்த மயிலாடுதுறை இளைஞர். தற்போது இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள நிலையில், வைரலாகி வருகிறது.