திருப்பத்தூரில் மரத்திற்கு மரம் தாவிய சாரைப்பாம்பு! பிடிபட்டது எப்படி? - fire department save snake
Published : Feb 25, 2024, 12:28 PM IST
திருப்பத்தூர்: திருப்பத்தூர் நகரில் மரத்திற்கு மரம் தாவி ஆட்டம் காட்டிய எட்டு அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பை தீயணைப்புத்துறையினர் சில மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாகப் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
திருப்பத்தூர் தீயணைப்புத்துறையினர் குடியிருப்பு பகுதியில் உள்ள மரத்தில், நேற்று (பிப்.24) சுமார் எட்டு அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு ஒன்று இருப்பதாக பொதுமக்கள் கூட்டமாகக் கூடிப் பார்த்துக் கொண்டிருந்தனர். இதனையறிந்த தீயணைப்புத்துறையினர் உடனடியாக அந்த பாம்பைப் பிடிக்க முற்பட்டபோது, சாரைப்பாம்பு மரத்திற்கு மரம் தாவிச் சென்றது.
இதனால் சிறிது நேரம் பாம்பைப் பிடிக்க முடியாமல் தீயணைப்புத் துறையினர் திணறினர். அப்போது தீயணைப்புத் துறை வீரர் ராமச்சந்திரன் மரத்தில் ஏறுவதைக் கண்ட அவரின் மகன், "என் அப்பா தான் தைரியசாலி. அப்பா அந்த பாம்பைப் பிடிங்க" என உற்சாகப்படுத்தினான்.
இதையடுத்து சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு மரத்தில் இருந்த பாம்பை கீழே தள்ளி தீயணைப்புத் துறையினர் லாவகமாகப் பிடித்தனர். பின்னர் பிடிக்கப்பட்ட சாரைப்பாம்பு வனத் துறையினரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.