அய்யூரில் தாயை இழந்து பரிதவித்த குட்டி யானை! - baby elephant lost from its mother
Published : May 13, 2024, 8:32 PM IST
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு அடுத்த அய்யூர் வனப்பகுதியில் அதிகளவில் மூங்கில் காடுகள் காணப்படுகிறது.
மேலும், அரிய வகை மரம், செடி, கொடிகள், தாவரங்களும், வனவிலங்குகளான காட்டு யானைகள், காட்டெருமைகள், புள்ளி மான்கள், கடமான்கள், கரடிகள், எறும்பு திணிகள், எகிப்திய கழுகுகள், மயில்கள், அரிய வகையான சாம்பல் நிற அணில்கள், பன்றிகள், சிறிய அளவிலான ஊர்ந்து செல்லும் உயிரினங்கள் உள்ளிட்ட பல வகையான உயிரினங்களும் வசித்து வருகின்றன. மேலும், இங்கு அதிக விஷத்தன்மை கொண்ட ஆப்பிரிக்க வகை பூரான்கள் உள்ளன.
இப்பகுதியில், நிரந்தரமாக 50 காட்டுயானைகள் வசித்து வருகின்றன. இந்நிலையில், இன்று(மே.13) காலை யானைக் கூட்டத்திலிருந்து பிரிந்த குட்டி யானை ஒன்று அருகே உள்ள தட்டசந்திரம் கிராமத்திற்குள் நுழைந்து, விளைநிலங்களில் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வந்ததாகக் குற்றம் சாட்டினர்.
மேலும், தாயை விட்டுப் பிரிந்து வந்த குட்டி யானையை வனப்பகுதிக்குள் விரட்டுமாறும், தாயுடன் சேர்த்து வைக்குமாறும் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் வனத்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.