வேலூர்: வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வழக்கறிஞர் ராஜகோபாலாச்சாரியார் நினைவு சொற்பொழிவு விழாவானது பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில், ஏராளமான வழக்கறிஞர்கள், சட்டக்கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
மேலும் இவ்விழாவில், சிறப்பு அழைப்பாளராக சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கிருபாகரன் கலந்துகொண்டு வழக்கறிஞர் ராஜகோபாலாச்சாரியார் திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் தொடர்ச்சியாக முன்னாள் நீதிபதி கிருபாகரன் இந்த விழாவில் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், "மற்ற நாடுகளை காட்டிலும் நமது நாட்டில் வழக்குகள் அதிகம் தேக்கம் அடைந்துள்ளது என்பதும் உண்மை தான். அதற்கு காரணம், போதிய நீதிபதிகள் இல்லை. மேலும், தேவையான அளவு நீதிமன்ற கட்டிடங்களும் இல்லை.
இதுமட்டும் அல்லாது, வழக்கறிஞர்களும் ஒரு காரணம். இவற்றை எல்லாம் மாற்றுவது என்பது வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரின் கடமையுமாகும். நான் நீதிபதியாக இருந்த போது 50 ஆண்டுகளுக்கு முன்னர் 1965 ஆம் ஆண்டு தொடரப்பட்டு 50 ஆண்டுகளாக தீர்வு காணாமல் இருந்த வழக்கை தீர்ப்பு சொல்லி முடித்து வைத்திருக்கிறேன்.
இதையும் படிங்க: வேலூரில் சிறுமி கூட்டுப் பாலியல் பலாத்காரம்: போக்சோவில் 3 பேர் கைது!
வழக்குகள் தேக்கம் அடையாமல் இருக்க நம் அனைவரின் பொறுப்பும் செயலும் கட்டாயம் தேவை. மேலும், இளம் தலைமுறையினர் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். ஆனால், இன்றைய கால கட்டத்தில் அதனை திசை திருப்பும் வகையில் இணைய வழி சேவைகளும், கைப்பேசிகளும் உள்ளது. இவை நல்லவைக்கும் பயன்படுகிறது, தீமைக்கும் பயன்படுத்தப்படுகிறது.
அதிலும் குறிப்பாக, தற்போதைய போதைப் பொருட்கள் மற்றும் மது கலாச்சாரத்தில் உள்ள தீமைகளில் இருந்தும் இளம் தலைமுறையினர் தங்களை பாதுகாத்துகொள்ள வேண்டியது கட்டாயமாக உள்ளது. வேலூர் மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்னர் மது போதை கொண்ட மூன்று பேர் ஒரு சிறுமியை தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது வேதனையளிக்கிறது.
போதை, ஒரு மனிதனை பேயாகவும் மற்றும் மிருகமாகவும் மாற்றுகிறது. ஆகவே ஒரு போதும் போதைக்கு இளம் தலைமுறையினர் அடிமையாக கூடாது. கல்வியில் கவனம் செலுத்தி நாட்டை முன்னேற்ற பாதையில் கட்டமைக்க வேண்டும்" என்று அறிவுறுத்தினார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்