கொடைக்கானலில் 61வது மலர் கண்காட்சி.. பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் மலர்கள்! - 61st Kodaikanal flower show
Published : May 17, 2024, 4:05 PM IST
திண்டுக்கல்: கொடைக்கானலில் மே மாத சீசனுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் விதமாக, நகரின் மையப் பகுதியில் உள்ள பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டிற்கான 61வது மலர் கண்காட்சி இன்று (மே 17) துவங்கி 10 நாட்கள் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது. மேலும், பிரையண்ட் பூங்காவில் கொல்கத்தா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மலர் நாற்றுகள் மூன்று கட்டங்களாக நடவு செய்யப்பட்டு, தற்போது பல வண்ணங்களில் பல வகையான மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
இதுமட்டுமல்லாது, சேவல், மயில், 360 டிகிரி செல்ஃபி பாயிண்ட், வீடு, பொம்மைகள், நெருப்புக்கோழி, காய்கறிகளில் டிராகன், கொரிலா, டெடி பியர் உள்ளிட்ட உருவங்கள் மலர்களால் வடிவமைக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கு காட்சிபடுத்தப்பட்டுள்ளது.
இந்த மலர் கண்காட்சியை, வேளாண்மை உற்பத்தி ஆணையர் அபூர்வா ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். மேலும், இந்த மலர் கண்காட்சி துவக்க விழாவில், மாவட்ட ஆட்சியர் பூங்கொடி மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டர்.
இதுமட்டுமல்லாது, இந்த மலர்கண்காட்சிக்கு வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள், பல வகையான மலர்களைக் கண்டு ரசித்தனர். மேலும், இந்த வருடம் மலர் கண்காட்சிக்கான நுழைவுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.