58வது ஆண்டுகளாக நடைபெறும் கபடி போட்டி: கிரிஷ்ணகிரியில் வீரர்கள் உற்சாகம்!
Published : Jan 28, 2024, 4:28 PM IST
கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே 58வது ஆண்டாக நடைப்பெற்ற கபடி போட்டியில் முதல் இரண்டு பரிசுகளை சேலம் மாவட்ட அணிகள் தட்டிச் சென்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு ஒசூர் எம்எல்ஏ, மேயர் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பூனப்பள்ளி கிராமத்தில் குடியரசு தினத்தையொட்டி ஆண்டுதோறும் கபடி போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் கோல்டன் பிரதர்ஸ் ஸ்போர்ட்ஸ் அஷோசியேசன் சார்பில் 58வது ஆண்டு கபடி போட்டி நடைபெற்றது. நேற்று (ஜன. 27) தொடங்கிய கபடி போட்டியில் சென்னை, சேலம், கிருஷ்ணகிரி, பாண்டிச்சேரி, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 32 அணிகள் பங்கேற்றன.
பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்ட இந்த கபடி போட்டியில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த தம்பம்பட்டி அணியும், சேலம் உதயா அணியும் இறுதிப் போட்டியில் மோதிக் கொண்டன. இந்த இறுதி போட்டியினை ஒசூர் எம்.எல்.ஏ பிரகாஷ், ஒசூர் மாநகர மேயர் சத்யா ஆகியோர் தொடக்கி வைத்து வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இறுதிப் போட்டியில் தம்பம்பட்டி அணி 22 புள்ளிகளை பெற்று முதல் இடத்தையும், சேலம் உதயா அணி 11 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தையும் பிடித்தது. முதல் பரிசாக கோப்பையுடன் 50 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 30 ஆயிரம் ரூபாயும் மூன்று மற்றும் நான்காம் பரிசாக தலா 15 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. இந்த கபடி போட்டியை காண சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் பூனப்பள்ளி கிராமத்தில் திரண்டனர்.