சென்னை:உலகளவில் பார்த்தோமென்றால் பலரும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் (AMT - Automated Manual Transmission) கார்களையே அதிகமாகத் தேர்வு செய்து வருகின்றனர். இந்த ஆட்டோமேட்டிக் காரை ஓட்டும் போது கிளட்சை மிதித்துக்கொண்டு கியரை மாற்றத் தேவையில்லை. ஆக்சிலேட்டரை மட்டும் அழுத்திக்கொண்டு செல்லாம். மேனுவல் கார்களுடன் ஒப்பிடுகையில், ஆட்டோமேட்டிக் காரை ஓட்ட கற்றுக்கொள்வதும் எளிது. இவ்வளவு வசதிகள் நிறைந்த கார்களை பலரும் விரும்பி வாங்குகின்றனர். ஆனால், இந்தியாவைப் பொறுத்தமட்டில், மேனுவல் கார்களையே மக்கள் அதிகமாக வாங்குவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கார் விலை மாறுபாடுகள்:இந்தியாவில் பெரும்பாலான மக்கள் மேனுவல் கார்களை வாங்குவதற்கான முக்கிய காரணம் என்ன என்று பார்த்தோமானால், ஆட்டோமேடிக் கார்களின் விலை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கார்களுடன் ஒப்பிடும் போது, மேனுவல் கார்களின் விலைக்குறைவு. ஸ்பின்னி அறிக்கையின் படி, மேனுவல் காரை விட ஆட்டோமேட்டிக் கார் விலை 80 ஆயிரம் ரூபாய் அதிகம். இதனால் இந்தியர்கள் பலரும் மேனுவல் கார்களை தேர்ந்தெடுப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
காப்பீட்டுச் செலவுகள்:ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தொழில்நுட்பம் காரணமாக ஆட்டோமேட்டிக் கார் வாங்குவோருக்கு காப்பீட்டுச் செலவுகள் அதிகமாகிறது. ஆகவே காப்பீட்டுச் செலவுகளில் பணத்தைச் சேமிக்க மேனுவல் கார்களை அதிகமாகத் தேர்வு செய்கின்றனர்.
பராமரிப்பு செலவுகள்:மேனுவல் கார்களில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதற்குப் பராமரிப்பு செலவுகளும் ஒரு காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில் மேனுவல் கியர்பாக்ஸ் கார்களை விட, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கார்களின் பராமரிப்பு செலவுகள் அதிகம். ஆட்டோமேட்டிக் கார்களுடன் ஒப்பிடுகையில், மேனுவல் கார்களில் பயன்படுத்தப்படும் ஆயில் விலையும் குறைவு.