ஹைதராபாத்: கடந்த ஜூன் 5ஆம் தேதி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலிருந்து நாசா மற்றும் போயிங் நிறுவனம் இணைந்து, போயிங் ஸ்டார்லைனர் (Boeing Starliner) எனப்படும் சோதனை விண்கலத்தை விண்வெளியில் இருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (International Space Station) அனுப்பியது. இந்த சோதனை முயற்சியானது, மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் அபூர்வ முயற்சியாகும்.
இந்த சோதனை விண்கலனில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சக விஞ்ஞானியான புட்ச் வில்மோர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். நாசா மற்றும் போயிங் நிறுவனத்தின் திட்டப்படி பார்த்தால், இந்த சோதனை விண்கலன் ஜூன் 15ஆம் தேதியன்று பூமியை வந்தடைந்து இருக்க வேண்டும்.
ஆனால் வரவில்லை. இங்கு ஆரம்பித்தது சிக்கல், அவர்கள் அனுப்பி வைத்த விண்கலன் செல்லும் வழியில் ஹீலியம் கசிவுகள் ஏற்பட்டு, உந்துதல் பிரச்னை உருவாகியுள்ளது. அதனால் திட்டமிட்டபடி ஜூன் 15ஆம் தேதி பூமிக்கு தரையிறங்கி இருக்க வேண்டிய சூழல் தற்போது தாமதமாகி, இன்னும் விண்ணை சுற்றிக்கொண்டு பூமிக்கு திரும்ப வழி இல்லாமல் உள்ளனர்.
இதைக் கேட்பதற்கு இரவு கனவில் வருவது போலவோ, இல்லை ஹாலிவுட் படத்தில் வருவது போலவோ இருக்கலாம். ஆனால் நிஜம், மனிதர்களாக இருந்து விண்ணை வட்டமடித்துக் கொண்டு இருக்கும் நிலை ஹீரோஸ்டிகாக இருக்கலாம். ஆனால், சிந்தித்துப் பாருங்கள்.. தற்போது நீங்கள் விண்ணில் இது போல் சிக்கிக் கொண்டால் என்ன செய்வீர்கள்? அனைவரும் கரோனா ஊரடங்கு காலத்தை நினைவு கூர்ந்தால் தனிமையில் சிக்கிக் கொள்வதன் வலியை உணரலாம்.
இந்நிலையில், இந்த சோதனை முயற்சியில் போயிங் நிறுவனம் குறித்து அறிய வேண்டியது அவசியமாகிறது. போயிங் நிறுவனம் என்பது வணிக ரீதியாக மனிதனை விண்ணுக்கு அனுப்பும் முயற்சியில் இறங்கியது, அதற்கு கருவி உதவிகளை செய்தது நாசா. அப்படி இருக்க, விண்வெளி வீரர்கள் குறித்து இதுவரை போயிங் நிறுவனம் எந்த அறிவிப்பும் தரவில்லை.
நாசா கூறுவதை வைத்து பார்த்தால், அந்த விண்கலன் 2025ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் பூமிக்கு வர வாய்ப்புள்ளது. ஆனால், விண்வெளி வீரர்களின் நிலை குறித்து பரிதாபகரமான தகவல்களை கூறுகிறது நாசா. மேலும், விண்கலன் கோளாறுகள் சரி செய்யப்படுவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்ற தகவல் மட்டும் தரப்படும் நிலையில், பாதுகாப்பான தரையிறக்கம் குறித்து எந்த நிச்சயத்தையும் நாசா தரவில்லை.
எட்டு நாட்களில் பூமிக்கு வந்து இறங்க இருந்த சுனிதா மற்றும் வில்மோரின் மனநிலையை எண்ணிப் பாருங்கள். நாம் பேருந்திலோ அல்லது ரயிலிலோ நீண்ட பயணம் மேற்கொள்ளும் போது, எப்போதுதான் நாம் இறங்கும் இடம் வரும் என நினைப்பது உண்டு. அந்த நேரத்திற்காக காதித்திருப்பது உண்டு. அந்த காத்திருக்கும் நொடிகள் நமது வாழ்வில் நீண்ட பொழுது போல் தோன்றும். அதேபோல் தான் ,பழுதான விண்கலனில் எப்போது பூமியில் இருக்கும் தனது வீட்டிற்குச் செல்வோம் என இருவரும் எதிர்பார்த்து இருக்கும் திக் திக் நொடிகள் குறித்து வார்த்தையால் கூற முடியாது.