டெல்லி: இந்தியாவிற்குள் காலடி எடுத்து வைக்கும் வியட்நாம் மின்சார கார் (எலெக்ட்ரிக் கார்) தயாரிப்பு நிறுவனமான வின்-ஃபாஸ்ட் (VinFast), தமிழ்நாட்டின் ‘முத்து நகரம்’ என்று அழைக்கப்படும் தூத்துக்குடி மாவட்டத்தில் தனது ஆலையை நிறுவியுள்ளது. நிறுவனத்தின் முதல் கார் தயாரிப்பு எப்போது தொடங்கும் என வாடிக்கையாளர்கள் காத்திருந்த நேரத்தில், நடந்துவரும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 கண்காட்சியில், வின்-ஃபாஸ்ட்டின் புதிய எலெக்ட்ரிக் கார் காட்சிப்படுத்தப்பட்டது.
பிரீமியம் தரத்தில் சாலையை அலங்கரிக்கக் காத்திருப்பது வின்-ஃபாஸ்ட்டின் VF 7 மற்றும் VF 6 மாடல் மின்சார கார்கள் ஆகும். கார் தயாரிப்பில் 2017 முதல் செயல்பட்டு வரும் இந்நிறுவனம் பல பிரீமியம் ரக கார்களை உலக நாடுகளில் தயாரித்து வருகிறது. தற்போது இந்தியா போலவே, அமெரிக்காவிலும் புதிய தயாரிப்பு ஆலையை நிறுவனம் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருப்புமுனையை ஏற்படுத்தும்
இதுதொடர்பான அறிக்கையில், முதல் இரண்டு மின்சார கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளோம். வலது பக்கம் இருந்து வாகனத்தை இயக்கும் வகையில் நாங்கள் தயாரிக்கப் போகும் முதல் வாகனம் இதுவாகும். மாசற்ற இந்தியாவின் பயணத்தில் நாங்களும் இணைய இருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சி என்று கூறப்பட்டிருந்தது.
வின்ஃபாஸ்ட் ஆசியாவின் தலைமை நிர்வாக அலுவலர் ஃபாம் சான் சாவ் பேசுகையில், "எங்கள் பிரீமியம் எஸ்யூவி ரக மின்சார கார்களான VF 7 மற்றும் VF 6 ஆகியவை, இந்தியாவில் மின்சார வாகனங்கள் கிடைப்பதை விரைவுபடுத்தும் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.