ஹைதராபாத்: உள்நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் (Tata Motors), அதன் பிரபலமான காம்பாக்ட் எஸ்யூவி டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் (Tata Nexon facelift) மாடலை பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களுடன் இந்த ஆண்டு சந்தையில் அறிமுகப்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக டாடா நிறுவனம் அதன் நெக்ஸான் சிஎன்ஜி (Nexon CNG) மாடலை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. ஜனவரி மாதம் நடைபெற்ற இந்தியா மொபிலிட்டி ஷோவில் (India Mobility Show) டாடா மோட்டார்ஸ் அதன் நெக்ஸான் சிஎன்ஜி மாடலை காட்சிப்படுத்தியது.
இதன் தொடர்ச்சியாக, புதிய டாடா நெக்ஸான் ஐசிஎன்ஜி மாடல் பற்றிய தகவல்கள் சமீபத்தில் அதிகம் வெளிவருகிறது. அந்தவகையில், இந்தியா மொபிலிட்டி ஷோவில் டாடா மோட்டர்ஸ் காட்சிப்படுத்திய டாடா நெக்ஸான் ஐசிஎன்ஜி மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இருந்தது. ஆனால், தற்போது இந்த காம்பாக்ட் எஸ்யூவியின் சிஎன்ஜி பதிப்பை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடனும் டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
எக்ஸ்டீரியர் மற்றும் இன்டீரியர் டிசைன்: தோற்றம் மற்றும் அம்சங்களை பொறுத்தவரையில், புதிய டாடா நெக்ஸான் ஐசிஎன்ஜி (Tata Nexon iCNG) மாடலின் எக்ஸ்டீரியர், இன்டீரியர் மற்றும் உபகரணங்கள் பட்டியல் அதன் நிலையான SUV போலவே இருக்கும் என்றும், இருப்பினும் சிஎன்ஜி சிலிண்டரின் எடையைத் தாங்கும் வகையில் அதன் சஸ்பென்ஷன் அமைப்பில் கண்டிப்பாக சில மாற்றங்கள் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றன.