டெல்லி : 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தை காட்டிலும் கடந்த பிப்ரவரி மாதம் நாட்டில் தொலைத் தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை 0.38 சதவீதம் அதாவது 119.7 கோடியாக அதிகரித்து உள்ளதாக இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தெரிவித்து உள்ளது.
குறிப்பாக நகர்ப்புறங்களில் தொலைபேசி சந்தா 66 கோடியே 37 லட்சமாகவும், கிராமப்புறங்களில் தொலைபேசி சந்தா 53 கோடியே 13 லட்சமாக அடுத்தடுத்து 0.40 சதவீதம் மற்றும் 0.34 சதவீதம் வளர்சி கண்டு உள்ளதாக டிராய் தெரிவித்து உள்ளது. அதேபோல் பிராட்பேண்ட் சந்தாதாரர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து உள்ளதாக டிராய் கூறி உள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 91 கோடியே 10 லட்சமாக இருந்த பிராட்பேண்ட் சந்தா, பிப்ரவரி மாதத்தில் 91 கோடியே 67 லட்சமாக அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒட்டுமொத்த பிராட்பேண்ட் சந்தா இணைப்புகளில் முன்னணியில் உள்ள முதல் 5 தொலைத் தொடர்பு நிறுவனங்கள் 98 புள்ளி 35 சதவீத சந்தாதாரர்களை கைப்பற்றி உள்ளதாக டிராய் தெரிவித்து உள்ளது.
இதில் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனம் 52.2 சதவீதமும், பாரதி ஏர்டெல் நிறுவனம் 29.41 சதவீதமும், வோடாபோன் ஐடியா நிறுவனம் 13.80 சதவீதமும், அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் 2 புள்ளி 69 சதவீதமும் கொண்டு இருப்பதாக டிராய் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அதேபோல் குறிப்பிடத்தக்க வகையில் வயர்லைன் சந்தாவும் 3 கோடியே 31 லட்சமாக கடந்த பிப்ரவரி மாதம் அதிகரித்து உள்ளதாக இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்து உள்ளது. அதேநேரம் இந்த வயர்லைன் சந்தையில் பொது நிறுவனங்களான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் மற்றும் ஏபிஎஸ்எப்எல் ஆகிய நிறுவனங்கள் 28 புள்ளி 18 சதவீதம் பங்கை வைத்து இருப்பதாக டிராய் தெரிவித்து உள்ளது.
மேலும், தொலைபேசி சந்தாதாரர்கள் தங்களது தொலைத் தொடர்பு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறுவதற்காக மேற்கொள்ளப்படும் போர்டபிளிட்டி கோரிக்கை கடந்த பிப்ரவரி மட்டும் 1 கோடியே 15 லட்சம் என்ற அளவில் வந்து உள்ளதாக இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்து உள்ளது.
இதையும் படிங்க :செமிகண்டக்டர் உற்பத்தியில் சீனாவுக்கு சவால் விடும் அமெரிக்கா! தைவான் நிறுவனத்திற்கு 6.6 பில்லியன் டாலர் நிதி! - Semi Conductor