இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை ஜான் ஜே ஹோப்ஃபீல்ட் (John Hopfield) மற்றும் ஜெஃப்ரி ஹிண்டன் (Geoffrey Hinton) ஆகியோர் பகிர்ந்துகொள்கின்றனர். இயந்திர கற்றல் துறையில் அவர்களது பங்களிப்புக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
ஜான் ஹோப்ஃபீல்ட் தகவல்களிலிருந்து (Data) படங்கள் மற்றும் பிற வடிவங்களை உருவாக்குவதற்கும், மறுகட்டமைப்பு செய்வதற்கும் ஒரு நினைவகத்தை உருவாக்கினார். தரவுகளில் உள்ள அம்சங்களைப் புரிந்துகொள்வதன் வாயிலாக படங்களில் உள்ள குறிப்பிட்ட கூறுகளை அடையாளம் காண ஒரு சிறப்பு முறையை ஜெஃப்ரி ஹிண்டன் கண்டுபிடித்துள்ளார். செயற்கை நியூரல் நெட்வொர்க்குகளைப் (Artificial Neural Networks) பயன்படுத்தி இயந்திர கற்றலை சாத்தியமாக்க இந்த இரண்டு ஆய்வுகளும் நடத்தப்பட்டன.
எதற்காக நோபல் பரிசு? எளிய விளக்கம்:
சரி, இதை அப்படியே சொல்லிவிட்டால், தலையே சுற்றிவிடும். உங்களுக்கு புரியும்படியான எடுத்துக்காட்டுடன் ஹோப்ஃபீல்ட், ஜெஃப்ரி ஹிண்டன் ஆகியோரின் கண்டுபிடிப்புகளை விளக்குகிறேன்.
முதலில், நாம் எப்படி பல காரியங்களை சிறுவயது முதல் புரிந்துகொண்டோம் என்பதை நினைத்துபாருங்கள். இன்னும் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், ஒரு நாய்க்குட்டியை ஒரு சிறுவன் அறிந்துகொள்ள, விதவிதமான நாய் குட்டிகளை பார்த்துபின் தான் , 'இது தான் நாய்க்குட்டி' என புரிந்துகொள்வான்.
இயற்பியலுக்கான நோபல் பரிசு வாங்கிய ஜான் ஹாப்ஃபீல்டும், ஜெஃப்ரி ஹின்டனும், கணினிகளுக்கு நம்மைப் போல கற்றுக்கொள்ளும் வழிகளை சொல்லிக் கொடுத்தார்கள்.
மனிதர்களைப் போன்றே, புகைப்படத்தில் இருக்கும் முகங்களை அடையாளம் காண்பது, பிறர் பேசுவதைப் புரிந்துகொள்வது போன்றவற்றிற்கு, கணினி புரோக்கிராம்களை உருவாக்க முடியுமா என்பதை நாம் நினைத்துப் பார்த்திருப்போமா? இதை சாத்தியமாக்கியதற்கு தான் இந்த ஆய்வாளர்களுக்கு நோபல் பரிசு கொடுக்கப்படுகிறது.
இவர்கள், 'செயற்கை நரம்பியல் வலைப்பின்னல்' எனும் ஒரு முறையைக் கண்டுபிடித்தனர். மூளை செல்கள் எப்படி நெட்வொர்க் போல செயல்படுகிறதோ, அதேபோல, இந்த செயற்கை நரம்பியல் நெட்வொர்க்கும் எடுத்துக்காட்டுகளைப் பார்த்து கற்றுக்கொள்ளும்.