வாட்ஸ்ஆப் (WhatsApp) மெசேஜிங் செயலி புதிய அம்சங்களை ஒன்றன் பின் ஒன்றாக அறிமுகப்படுத்துவதன் வாயிலாக தனது வாடிக்கையாளர்களை எங்கும் சிதறவிடாமல் அணைத்து வைத்திருக்கிறது. இப்போது, வாட்ஸ்ஆப் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது அரட்டைகளை (சாட்களை) நம் விருப்பப்படி வெவ்வேறு பட்டியல்களாக பிரித்து பயன்படுத்த அனுமதிக்கிறது.
இப்படி அரட்டைகளைப் பிரித்துப் பயன்படுத்துவதன் வாயிலாக, தேவையான அரட்டைகளை எளிதாகக் கண்டறிவது சாத்தியமாகிறது. பயனர்களின் பல நாள் கோரிக்கையாக இருந்த இந்த சேவையை, தற்போது மெட்டா (Meta) நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது சில பீட்டா பயனர்களுக்கு மட்டும் சோதனை முயற்சிக்காக வழங்கப்பட்டுள்ளது. விரைவில், இது அனைத்து பயனர்களுக்கும் அப்டேட் வாயிலாக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரட்டைகளைப் பட்டியலிடுவது எப்படி?
நீங்கள் வாட்ஸ்ஆப் செயலியைத் திறந்தவுடன், அனைத்தும், படிக்காத, பிடித்தவை மற்றும் குழுக்கள் விருப்பங்களைக் காண முடியும். ஆனால் இப்போது நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், அயலவர்கள் மற்றும் சக ஊழியர்களின் அரட்டைகளை தனித்தனியாக பட்டியலிட புதிய அம்சம் உங்களை அனுமதிக்கிறது. இந்த புதிய அம்சத்தின் வாயிலாக கூடுதலாகவும் தேவையானப் பட்டியல்களை உருவாக்க முடியும் என்பது தான் சிறப்புமிக்கதாகப் பார்க்கப்படுகிறது.
அன்புக்குரியவரின் அரட்டைக்கு 'பிடித்தவை' பட்டியல், குழுக்களுக்கான 'குழு' பட்டியல் மற்றும் நண்பர்களுக்கான 'நண்பர்கள்' பட்டியலும் உள்ளன. நீங்கள் கூடுதல் விருப்பங்களைச் சேர்க்க விரும்பினால், கீழ்வரும் படிகளைப் பின்பற்றவும்.
- வலதுபுறத்தில் உள்ள '+' விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- '+' ஐகானின் உதவியுடன், உங்கள் விருப்பப்படி குடும்பம், அலுவலகம் மற்றும் நண்பர்களின் புதிய பட்டியல்களை உருவாக்கலாம்.
- பட்டியலிடப்பட்டவற்றை ஃபில்டர்கள் வாயிலாகவும் அணுக முடியும்