ஹைதராபாத்: இந்திய விண்வெளி ஆய்வு மையம் புதிய சாதனைகளை தொடும் உயரத்தில் தொழில்நுட்பங்களை வளர்த்தி வருகிறது. அந்த வகையில் இரு செயற்கைக்கோள்களை இணைத்து பல வேலைகளை எளிமையாக்கும் 'SpaDex' திட்டத்தை அறிமுகம் செய்து, அதில் முக்கியமான பகுதியை கடந்து சாதனை படைத்துள்ளது.
இந்த திட்டத்தில், இரு செயற்கைக்கோள்களை இணைக்கும் 'டாக்கிங்' முறையை வெற்றிகரமாக இஸ்ரோ செய்து முடித்துள்ளது. டாக்கிங் சக்சஸ் என்று தொடங்கும் பதிவை தங்கள் பிரத்யேக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் இஸ்ரோ, "இது ஒரு வரலாற்று நிகழ்வு. டாக்கிங் முறை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. முதலில் 20 கிலோமீட்டர் தொலைவில் சுற்றிவந்த செயற்கைக்கோள்களை, ஐந்து கி.மீ தூரத்தில் கொண்டுவந்து சோதனை செய்யப்பட்டது. பின்னர் இரு செயற்கைக்கோள்களும் ஒன்றோடு ஒன்று வெற்றிகரமாக இணைக்கப்பட்டது," என்று குறிப்பிட்டிருந்தது.
இந்த வெற்றியை அடுத்து அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக செயற்கைக்கோள் இணைப்பில் நான்காம் இடத்தை இந்தியா தக்கவைத்துள்ளது. வானியல் ஆய்வு மட்டுமல்ல, புவி சுற்றுவட்ட பாதையில் இந்தியாவின் விண்வெளி நிலையம் அமைக்கும் கனவு திட்டத்தை மெய்ப்பிக்கவும் இந்த வெற்றி புதிய சாத்தியக்கூறுகளை உருவாக்கியுள்ளது.
SpaDex திட்டத்தில் டாக்கிங் என்றால் என்ன?
இந்திய விண்வெளி ஆய்வின் மைல்கல்லாகப் பார்க்கப்படும் SpaDex திட்டம், உலகளவில் வெகுசில நாடுகள் மட்டுமே சோதனை செய்து வெற்றிகண்ட முறையாகும். டிசம்பர் 30, 2024 அன்று சுமார் 220 கிலோ எடை கொண்ட SDX01 மற்றும் SDX02 என இரு செயற்கைக்கோள்கள் பி.எஸ்.எல்.வி சி60 (PSLV-C60) ராக்கெட் உதவியுடன் விண்ணில் செலுத்தப்பட்டது. இதில் SDX01 துரத்தி (Chaser) செல்லும் செயற்கைக்கோளாகவும், மற்றொன்றான SDX02 இலக்காகவும் செயல்படும்.
அவை 10 முதல் 20 கிலோமீட்டர் (கி.மீ) இடைவெளியுடன் மணிக்கு சுமார் 28,000 கி.மீ வேகத்துடன் புவிவட்டப் பாதையைச் சுற்றிவந்தது. இன்னும் சற்று எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், துப்பாக்கியில் இருந்து வெளிவரும் தோட்டாக்களை விட 10 மடங்கு அதிக வேகத்தில் இந்த செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றிவரும். இந்த நேரத்தில் இரு செயற்கைக்கோள்களையும் இணைப்பது சாத்தியமில்லாத ஒன்றாக இருந்தது. ஆனால், அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய மூன்று நாடுகள் மட்டும் இதில் வெற்றி கண்டது.
வெடித்து சிதறும் அபாயம்