டெல்லி :சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரை இறங்கிய நிலவின் தென் பகுதிக்கு பிரதமர் மோடி சூட்டிய சிவசக்தி என்ற பெயரை சர்வதேச வானியல் ஒன்றியம் அங்கீகரித்துள்ளது. நிலவை ஆராய்ச்சி செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு திட்டமிட்ட இடத்தை சென்றடைந்தது.
சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரன் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் தரை இறங்கி சாதனை புரிந்தது. விக்ரம் லேண்டரில் இருந்த பிரக்யான் ரோவரும் வெற்றிகரமாக வெளியே வந்து ஆய்வில் ஈடுபட்டது. இத்திட்டத்தின் மூலம் நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.
சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றியை இஸ்ரோ விஞ்ஞானிகள், நாட்டு மக்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் கொண்டாடி மகிழ்ந்தனர். பெங்களூரூவில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு நேடியாக சென்ற பிரதமர் மோடி, விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும், விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியதை குறிக்கும் வகையில் ஆகஸ்ட் 23ஆம் தேதியை தேசிய விண்வெளி தினம் ஆக கொண்டாடப்படும் என பிரதமர் அறிவித்தார்.