ஹைதராபாத்:உயர்மதிப்புமயமாக்கல் போக்குக்கு (premiumisation trend) மத்தியில் செலவழிப்பு வருமானம் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டில் இந்தியாவில் ஆடம்பர ஸ்மார்ட்ஃபோன்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக தொழில் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச் நிறுவனத்தின் ஆய்வு ஒன்றில், ரூ.1 லட்சம் மற்றும் அதற்கு மேல் மதிப்புள்ள ஸ்மார்ட்போன்களின் ஏற்றுமதிகள் இந்த 2024ஆம் ஆண்டினுடைய முதல் காலாண்டில் 20 சதவீதமும் மற்றும் இரண்டாம் காலாண்டில் 10 சதவீதமும் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
அந்தவகையில், சாம்சங் கேலக்ஸி ஃபோல்டபிள் மாடல் மற்றும் புதிய ஆப்பிள் ஐபோன் சீரிஸ் வருகையால் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் ஸ்மார்ட்போன்களின் ஏற்றுமதிகளின் பங்கு சற்று அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச் இயக்குநர் தருண் பதக் தெரிவித்துள்ளார்.
2021ஆம் ஆண்டில், லக்சூரி அல்லது சூப்பர் பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் நாட்டில் 14 சதவீத வளர்ச்சியைக் கண்டது. 2022ஆம் ஆண்டில், இந்த வளர்ச்சி 96 சதவீதமாகவும், 2023ஆம் ஆண்டில் சற்று குறைந்து 53 சதவீதமாகவும் உயர்ந்தது.
சாம்சங் நிறுவனத்தை பொறுத்தவரையில் 2023ஆம் ஆண்டில் 52 சதவீத பங்குகளுடன் சூப்பர் பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் சந்தையில் முன்னிலை வகித்தது. அதைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் 46 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தை பிடித்தது என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.