சென்னை: பக்கவாதம், முதுகுத் தண்டு காயம், தண்டுவட மரப்பு நோய், பார்கின்சன் நோய் ஆகியவற்றின் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு நோயாளிகளுக்கு பலன் அளிக்கும் வகையில் சென்னை ஐஐடி உடன் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் இணைந்து கையில் எடுத்துச் செல்லக்கூடிய பிளக்-அண்ட்-ட்ரெய்ன் ரோபோவை ‘PLUTO’ (plug-and-train robot) உருவாக்கியுள்ளனர்.
சென்னை ஐஐடியின் இயந்திரப் பொறியியல் துறை பேராசிரியர் சுஜாதா சீனிவாசன், ஐஐடியின் இயந்திரப் பொறியியல் துறை மற்றும் வேலூர் சிஎம்சி உயிரி தொழில்நுட்ப பொறியியல் துறை ஆகியவற்றில் பிஎச்டி பெற்ற அரவிந்த் நேருஜி, சிஎம்சி உயிரி பொறியியல் துறை பேராசிரியர் சிவகுமார் பாலசுப்ரமணியன் ஆகியோர் இந்த ரோபோவை கண்டுபிடித்துள்ளனர். காப்புரிமை பெறப்பட்ட இத்தொழில்நுட்பம் துல்லியமான சிகிச்சை இயக்கங்களையும், நிகழ்நேர தரவுகளையும் வழங்குகிறது.
மறுவாழ்வு மையங்கள், புறநோயாளிகளுக்கான மருத்துவமனைகள், பெரிய மருத்துவமனைகள், நோயாளிகளின் இல்லங்கள் ஆகியவற்றில் பயன்படுத்த இந்த சாதனம் மிகவும் பொருத்தமானதாகவும், குறைந்த விலையில் கை முடக்க பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கச் செய்யவும் உதவும். மேலும், விலை குறைவாக இருப்பதுடன், கையில் எடுத்துச் செல்லும் வகையில் இருப்பதால் சுகாதாரத் துறையில் மாற்றத்தை
ஏற்படுத்தும் கருவியாக இது அமையும்.
ப்ளூட்டோ
இதுகுறித்து, வேலூர் சிஎம்சி மருத்துவமனையின் உயிரி பொறியியல் துறை பேராசிரியர் சிவகுமார் பாலசுப்ரமணியன் கூறும்போது, சிஎம்சி வேலூர், ஐஐடி மெட்ராஸ் இடையிலான ஆராய்ச்சி மேம்பாட்டின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் 11 வெவ்வேறு மருத்துவமனைகளில் வழக்கமான மருத்துவப் பயன்பாட்டிற்காக ‘ப்ளூட்டோ’ அமைக்கப்பட்டிருக்கிறது. கை குறைபாடு உள்ள 1000-க்கும் மேற்பட்ட நோயாளிகளின் சிகிச்சைக்காக இந்த சாதனத்தைப் பயன்படுத்தியிருக்கின்றனர்.
சிஎம்சி வேலூரில் வாரத்திற்கு குறைந்தபட்சம் 15 நோயாளிகள் வழக்கமான கை சிகிச்சைக்காக ப்ளூட்டோ வைப் பயன்படுத்துகின்றனர். இந்திய வீடுகளில் பரிசோதிக்கப்பட்ட முதல் மற்றும் ஒரே உள்நாட்டு ரோபோ ப்ளூட்டோ தான். தீவிர சிகிச்சையை வழங்க முடிவதுடன் சிகிச்சையை அணுகக் கூடியதாக மாற்ற முடியும் என்பதை ப்ளூட்டோ நிரூபித்துள்ளது'' என்றார்.
இந்த சாதனம் மலிவு விலையில் கிடைக்கும் என்பதால் சுகாதார நிறுவனங்கள், நோயாளிகள் மீதான செலவைக் குறைத்து பரவலாக பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது. கழிவுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும் விதமாக, இந்த ரோபோவின் வடிவமைப்பில் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள், ஆற்றல் திறனுள்ள செயல்முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
புளூட்டோவின் சிறப்பம்சங்கள்
வீடு மற்றும் மருத்துவமனைகள் இரண்டிலுமே இந்த ரோபோவை சிகிச்சைக்கு பயன்படுத்தலாம். கையில் எளிதாக எடுத்து செல்ல முடியும். படுக்கை அல்லது சக்கர நாற்காலி அடிப்படையிலான சிகிச்சைக்கே இதனை பயன்படுத்தலாம். உயர் தரத்துடன், மலிவு விலையில் உற்பத்தி செய்யப்படுவதுடன் மருத்துவமனைகளுக்கும், நோயாளிகளுக்கும் எளிதாகவும், குறைந்த விலையிலும் கிடைப்பதை உறுதி செய்கிறது. பெருமளவு உற்பத்தி செய்யப்பட்டு, மருத்துவமனைகள், மறுவாழ்வு அமைப்புகள், வீடுகளில் பரவலாக பயன்படுத்த ஏதுவாக உள்ளது. பக்கவாதம் அல்லது கை முடக்கம் போன்ற நிலைமைகளுக்கு ஆரம்பகால மறுவாழ்வு சிகிச்சைக்கு உகந்ததாக இந்த சாதனம் இருக்கும்.