சுலப மாதத் தவணைத் திட்டம் அல்லது பணத்தை சேமித்து மொபைல் வாங்குவோம். அதோடு போராட்டம் நின்றுவிடாது; திருடர்களிடம் இருந்து பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இனி அந்த வேலையை கூகுள் பார்த்துக்கொள்ளும். ஆண்ட்ராய்டு போன்களுக்கான புதிய செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு (AI Security) அம்சத்தை நிறுவனம் கொண்டுவந்துள்ளது. ஒரு நபர் உங்கள் போனை திருடினால், அதை அவர் பயன்படுத்த முடியாதபடி கூகுள் லாக் செய்து விடுகிறது.
இதை மே மாதம் தங்களின் I/O நிகழ்வில் கூகுள் நிறுவனமே குறிப்பிட்டிருந்தது. அதில் திருட்டைக் கண்டறிந்து போனை லாக் செய்வது (Theft Detection Lock), ஆஃப்லைனில் போனை லாக் செய்வது (Offline Device Lock), தொலைதூரத்தில் இருந்தாலும் போனை லாக் செய்வது (Remote Lock) என்ற மூன்று பயன்பாடுகள் குறித்து விவரித்திருந்தது.
ஆண்ட்ராய்டு போன் பாதுகாப்பு:
மேலும், இது எப்படி திருடர்களிடம் இருந்து உங்கள் தரவுகளைப் பாதுகாக்கும் என்பதையும் கூகுள் தெரிவித்திருந்தது. இந்த மூன்று பயன்பாடுகளும் ஒன்றாக வேலை செய்கிறது. அதன்படி, ஒரு நபர் உங்கள் போனைப் பறித்துக்கொண்டு ஓட முற்பட்டால் (கார், பைக் அல்லது ஏதேனும் ஒரு வகையில் உங்களிடம் இருந்து தூரமாக நகர நினைத்தால்) ஆண்ட்ராய்டு இயங்குதளம் உடனடியாக உங்கள் மொபைலை லாக் செய்ய கட்டளையைப் பிறப்பிக்கும். இதனால், முதற்கட்டமாக போனில் இருக்கும் வங்கி சார்ந்த முக்கியமான தகவல்கள் பாதுகாக்கப்படும்.
ஒரு திருடன் உங்கள் மொபைலை "நீண்ட காலத்திற்கு இணையத்திலிருந்து துண்டிக்க" முயற்சிக்கிறார் என்ற சந்தேகம் ஆண்ட்ராய்டுக்கு எழுந்தால், 'ஆஃப்லைனில் போனை லாக் செய்' எனும் பயன்பாட்டின் உதவியுடன் மொபைல் தானாகவே லாக் ஆகிவிடும். 'ரிமோட் லாக்' என்பது உங்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி திருடப்பட்ட மொபைலை லாக் செய்ய அனுமதிக்கும் முறையாகும்.
அவசரகாலத்தில் கூகுளின் "எனது சாதனத்தைக் கண்டுபிடி" (Find My Device) அம்சத்தை உங்களால் அணுக முடியாவிட்டால் இந்த அம்சத்தைப் பயன்படுத்தி ஆண்ட்ராய்டு போனை நிர்வகிக்க முடியும்.
விளைவுகளை ஏற்படுத்தும் சைபர் அச்சுறுத்தல்:
பொதுவாக பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்கள் திருடு போய்விட்டதே என்பதை குறித்து மட்டும் கவலைப்படுவது அவசியமற்றதாகும் என சைபர் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், பாதுகாப்பாக போனில் சேகரிக்கப்படும் தனியுரிமை புகைப்படங்கள், காணொளிகள், வங்கித் தகவல்கள் என அனைத்திற்கும் ஆபத்து இருப்பதாக கூறுகின்றனர்.