சென்னை:1940 முதல் 1950-களில் ஆண் விளையாட்டு வீரர்களின் கோட்டையாக இருந்தது இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள். அன்று அவர்களை பார்த்து ஒரு பெண் சவால் விடுகிறாள் "என்னை தோற்கடித்து விட்டால் அந்த ஆணை நான் திருமணம் செய்துகொள்கிறேன் என்று"அவருக்கு அந்த துணிச்சல் வந்த காலகட்டத்தில் விளையாட்டுப் போட்டிகளை பெண்கள் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்து கை தட்டுவதோடு முடிந்து விடும். அதையும் தாண்டி சென்றால் வீரர்களைத் திருமணம் செய்து, அவர்களுக்கான சேவையைச் செய்வது மட்டுமே பெண்களின் வேலை என்றே கருதப்பட்டது.
இப்படியான சூழலில்தான் மல்யுத்த போட்டிகளில் ஆண்களுக்கு எதிராகக் களத்தில் இறங்க ஒரு பெண் தயாரானாள். அவளை வெகு சாதாரணமாக நினைத்து கேலி செய்த ஆண் மல்யுத்த வீரர்களும், பின் தங்கிய மனப்பான்மையோடு இருந்த சமூகமும் 1954-ஆம் ஆண்டு மே 4-ஆம் தேதி கதிகலங்கி நின்றது. ஆம் அன்றுதான் பிரபல மல்யுத்த வீரரான பாபா பஹல்வானை வெறும் 1 நிமிடம் 34 வினாடிகளில் தோற்கடித்து உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றார் இந்தியாவின் முதல் பெண் மல்யுத்த வீராங்கனையான ஹமிதா பானு.
அவரின் சாதனை ஒன்றும் மிக எளிதாகக் கிடைத்துவிடவில்லை என பல எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள். பெண் சிங்கத்தை எதிர்க்க யாருக்கு இங்கே துணிச்சல் இருக்கிறது என, உருது பெண்ணிய எழுத்தாளர் குர்ரதுலைன் ஹைதர் எழுதி இருக்கிறார்.
பல ஆண் வீரர்கள் அவளது சாதனைகளையும், உருவத்தையும் கேலி செய்திருக்கிறார்கள். பல போட்டிகளில் அவர் பங்கேற்க முடியாத வகையில் தடைகளும், எதிர்ப்புகளும் இருந்திருக்கிறது. சமூகமும் அவரின் சாதனைகளைக் கேலி செய்திருக்கிறது. அதே நேரம் இந்திய அளவில் பெண் மல்யுத்த வீராங்கனை என்ற அடிப்படையில் அவருக்கே உரித்தான ரசிகர்களும் இருந்திருக்கிறார்கள்.