தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / technology

இப்படி ஒரு படகை வாங்கணும்: அசரடிக்கும் திறனுடன் கேண்டேலா சி-8 மின்சாரப் படகு உலக சாதனை! - Candela C 8 electric speedboat

Electric Speedboat: ஹைட்ரோஃபோயில் மின்சார தொழில்நுட்பத்தில் இயங்கும் கேண்டேலா சி8 (Candela C-8) படகு, குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்தி, அதிக தூரம் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

Candela C-8 hydrofoil electric boat
கேண்டேலா சி-8 மின்சாரப் படகு (Credits: Candela)

By ETV Bharat Tech Team

Published : Sep 16, 2024, 5:06 PM IST

கேண்டேலா தனது உயர் தொழில்நுட்ப ஹைட்ரோஃபோயில் மின்சார படகு (Hydrofoil Electric Boat) ஆன கேண்டேலா சி-8 (Candela C-8) படகுகளால் புதிய உலக சாதனையைப் படைத்துள்ளது. டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் (DC Fast Charging) திறன்களையும், மிகுந்த உந்துசக்தித் திறனை வெளிப்படுத்தும் வடிவமைப்பையும் இந்த படகு கொண்டுள்ளது.

ஸ்வீடன், ஃபின்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையே வேகமாக பயணம் செய்து இந்த மின்சாரப் படகு சாதனை புரிந்துள்ளது. இதுவே, ஒரு மின்சார படகு பால்டிக் கடலை கடக்கும் முதல் முறையாகும். அது ஒரு மீட்டர் உயரத்தில் அலைகளின் மீது மேலெழும்பிச் சென்றதாகவும் குறிப்பிடப்பட்டது.

ஹைட்ரோஃபோயில்தொழில்நுட்பம்:

கேண்டேலா சி-8 படகானது, கணினி வாயிலாகக் கட்டுப்படுத்தப்படும் ஹைட்ரோஃபோயில்களைப் பயன்படுத்தி, படகு ஓடத் தொடங்கும்போது, அதை நீரில் இருந்து மேலே எழுப்புகிறது. இதனால் வெறும் படகின் ஒரு விழுக்காடு (1%) பகுதி மட்டுமே நீருக்கு எதிர்ப்பளிக்கும். இதனால் பிற படகுகளை விட கேண்டேலா சி-8, குறைவான; அதாவது 80% விழுக்காட்டிற்கும் குறைவான மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்துகிறது. இந்த மின்சார படகின் மொத்த பயண தூரம் ஸ்வீடன் முதல் ஃபின்லாந்து வரை 150 கடல் மைல்கள் (278 கிமீ) ஆகும்.

கேண்டேலா நிறுவனர் மகிழ்ச்சி:

"இன்று நீண்ட தூர மின்சார கடல்பயணங்கள் சாத்தியமில்லை என்பதற்கான கருத்தை மாற்றுவதுதான் எங்கள் நோக்கம் வெற்றிகண்டுள்ளது," என கேண்டேலா நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரும் (CEO), அதன் நிறுவனருமான கஸ்டவ் ஹசல்ஸ்கோக் (Gustav Hasselskog) தெரிவித்துள்ளார். தங்கள் ஹைட்ரோஃபோயில் தொழில்நுட்பத்தால் இயங்கும் மின்சார படகு, டீசல் போன்ற எரிசக்தி உதவியுடன் இயங்கும் படகுகளை விட சிறப்பாக செயலாற்றி இருக்கிறது என்றும் கூறினார்.

இதையும் படிங்க: வரலாறு படைத்த ஸ்பேஸ்-எக்ஸ்: சாதனைப் பாதையின் 10 முக்கிய நிகழ்வுகள்!

இந்த சாதனையை 69 kWh பேட்டரி திறன் கொண்ட சமீபத்திய சி-8 ரக கேண்டேலா படகு புரிந்தது. ஸ்டாக்ஹோமில் (Stockholm) இருந்து காலை பயணத்தைத் தொடங்கிய இந்த ஹைட்ரோஃபோயில் மின்சாரப் படகு, பகல் ஃபின்லாந்து நாட்டின் மரிஹம்ன் (Mariehamn) நகரை எட்டியது.

விலையைக் குறைக்கும் பயணம்:

அதே வேளையில், இந்த பயணத்தில் மின்சாரப் படகின் செலவினம் குறைவாக இருப்பதையும் நிரூபித்தது. கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் சுமார் ரூ.70,000 (750 யூரோ) எரிபொருள் செலவழித்த எரிபொருள் படகுடன் ஒப்பிடுகையில், கேண்டேலா சி-8 மின்சாரப் படகின் சார்ஜிங் செலவு வெறும் 4700 ரூபாய் (50 யூரோ) ஆகக் கணக்கிடப்பட்டுள்ளது. தெரிந்த சில துறைமுகங்களில் மின்சார சார்ஜிங் பயன்பாடு இலவசமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நிசான் மேக்னைட் வாங்க சரியான நேரம் இது; ரூ.1.25 லட்சம் வரை சலுகைகள்!

“இந்த பயணத்தின் போது எவ்வளவு தூரம் வரை படகு செல்லும் என்பதை தான் கவலையாக இருந்தது. ஆனால், குறிப்பிட்ட தூரத்தை எட்டுவதற்கு மூன்று முறை மட்டுமே படகை நாங்கள் சார்ஜ் செய்தோம். இதுவே, எரிபொருளாக இருந்தால், 6 முறை நிரப்பியிருக்க வேண்டும்” என்று அதன் நிறுவனர் கஸ்டவ் தெரிவித்தார்.

கெம்பவர் சார்ஜிங் தொழில்நுட்பம்:

இந்த பயணம் முழுவதும் தற்போதுள்ள சார்ஜிங் அமைப்புகளைப் பயன்படுத்தி நிறைவேற்றப்பட்டது. இது கெம்பவர் (Kempower) நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்டது. கப்பல் துறைமுகங்களில் 40 kW கம்போயர் மூவபிள் சார்ஜர்கள் வாயிலாக படகு அதிவேகமாக சார்ஜ் செய்யப்பட்டது.

இதுகுறித்து பேசிய கேம்பவர் நிறுவனத்தின் மார்க்கெட் செக்மென்ட் இயக்குநர் அன்ட்டி வூலா (Antti Vuola), “மாசற்ற நீர் பாதையை உருவாக்குவதற்கு மின்சாரப் படகுகளை வலுப்படுத்த வேண்டும். இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருப்பதற்கு நாங்கள் பெருமை கொள்கிறோம்” என்று தெரிவித்தார். மேற்கூறப்பட்ட தகவல்களை கேண்டேலா நிறுவனம் தங்களின் நியூஸ்ரூம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details