திருநெல்வேலி: நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜராக வந்த மாயாண்டி என்ற இளைஞரை நீதிமன்றம் வாயிலில் மடக்கிய கும்பல் ஓட ஓட வெட்டி கொலை செய்தது. கடந்தாண்டு நடுவக்குறிச்சியை சேர்ந்த பஞ்சாயத்து கவுன்சிலர் கொலைக்கு பழிக்கு பழியாக மாயாண்டியை கொன்றதாக ராமகிருஷ்ணன்(25), மனோராஜ் (27), சிவ முருகன்(19), தங்கமகேஷ்(21), முத்துகிருஷ்ணன்(26), கண்ணன்(20), கண்ணன்(22) ஆகிய ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கோர்ட் வாசல் முன்பு மாயாண்டி கொல்லப்பட்டபோது நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணிக்காக இருந்த காவலர்கள் படுகொலையை தடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக வழக்கறிஞர்கள், பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இதனை அடுத்து நெல்லை கொலை சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் சி. குமரப்பன் அமர்வு, தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. அப்போது, கொலை சம்பவத்தின் போது பணியில் கவனக்குறைவாக இருந்த போலீசார் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க நெல்லை காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இடைக்கால ஏற்பாடாக மாவட்ட நீதிமன்றங்களுக்கு தேவையான ஆயுதம் தாங்கிய காவல்துறையினரின் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: நெல்லை கோர்ட் வாசல் கொலை; கவனக்குறைவாக இருந்த காவலர்கள்.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
இந்நிலையில், தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் காவல் உதவி ஆய்வாளர் மறும் காவலர் ஒருவர் என துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட வேண்டுமெனவும், ஏற்கனவே பாதுகாப்புக்காக உள்ள காவலர்களுடன் கூடுதலாக பாதுகாப்பு பணிக்கு போலீசார் பணி அமர்த்த வேண்டும் என அனைத்து காவல் காவல் ஆணையர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார் வைத்துள்ள கன் பிஸ்டல் உட்பட நீண்ட ரேஞ் சுடப்படும் துப்பாக்கிகளை பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு கொடுக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், போலீசார் தற்காப்புக்காகவும், பாதுகாப்புக்காகவும் துப்பாக்கியை கட்டாயம் பயன்படுத்த வேண்டுமெனவும், இது தொடர்பாக என்ன மாதிரி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என வரும் 23ஆம் தேதிக்குள் பதில் கடிதம் அனுப்ப வேண்டும் எனவும் அனைத்து மாநகர காவல் ஆணையர் மற்றும் அனைத்து காவல் கண்காணிப்பாளர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.