ஹைதராபாத்: துருப்பிடிக்காத எஃகு (Stainless steel) மற்றும் அலுமினியத்தால் தயாரிக்கப்படும் அனைத்து சமையல் பாத்திரங்கள் மற்றும் உபகரணங்கள் மீதும் இந்திய தர நிறுவனக் குறியீடு (ISI) முத்திரை இடம்பெறுவதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளதாக இந்திய தரநிலைகள் பணியகம் (BIS - Bureau of Indian Standards) சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோரின் பாதுகாப்பு மற்றும் தேசிய தரநிர்ணய நடைமுறைகளை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய தரநிலைகள் பணியகம் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து, இந்திய தரநிலைகள் பணியகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், "சமையல் உபகரணங்கள் மீது ISI முத்திரை இடம்பெறுவதை கட்டாயமாக்கி, மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறை (DPIIT) தரக் கட்டுப்பாட்டு உத்தரவை அண்மையில் பிறப்பித்தது.
அதன்படி, சமையல் பொருள்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், இந்திய தரநிலைகள் பணியகம் சார்பில் இந்த இந்திய தர நிறுவனக் குறியீடு மேம்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், துருப்பிடிக்காத எஃகு சமையல் உபகரணங்கள் மீது 'ISI 14756:2022' என்ற குறியீடும், அலுமினிய சமையல் உபகரணங்கள் மீது 'ISI 1660:2024' என்ற குறியீடும் இடம்பெற வேண்டும். பாத்திரம் மற்றும் உபகரணங்களின் வடிவமைப்பு விவரக் குறிப்பு, செயல்திறன் அளவீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த தரக் குறியீடுகள் வழங்கப்பட வேண்டும்.
துருப்பிடிக்காத எஃகு பாதிரங்களுக்கு ISI தரநிலை பெறுவதற்கு தேவையான தகுதிகள்:
- உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பொருட்களின் பாதுகாப்பான கலவையை உறுதி செய்தல்.
- பாத்திர வடிவமைப்பில் சீரான தன்மை மற்றும் நடைமுறைத் தன்மையை வழங்குதல்.
- உயர்தர கைவினைத்திறன் மற்றும் அழகியல் முறையீட்டை கட்டாயப்படுத்துதல்.
- கறை சோதனை, இயந்திர அதிர்ச்சி சோதனை, வெப்ப அதிர்ச்சி சோதனை, உலர் வெப்ப சோதனை, பூச்சு தடிமன் போன்ற சோதனைகளுக்கு உட்படுத்துதல்.
அலுமினிய சமையல் உபகரணங்களுக்கு ISI தரநிலை பெறுவதற்கு தேவையான தகுதிகள்:
- பயன்படுத்தப்படும் பொருட்களின் ஒட்டுமொத்த தரம் மற்றும் தடிமன் ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும்.
- ISI 21 விதியின் படி, தரமான மூலப்பொருட்களைப் பயன்படுத்துவதை உறுதி செய்தல்.
- செய்யப்பட்ட பாத்திரங்கள் மற்றும் வார்ப்பு பாத்திரங்களுக்குத் தேவையான வடிவங்கள், பரிமாணங்கள் மற்றும் வேலைப்பாடுகளை விவரித்தல்.
- துருப்பிடிக்காத எஃகு பாத்திரங்களைப் போலவே, அலுமினியப் பாத்திரங்களும் கட்டாயமாக கறை சோதனை, இயந்திர அதிர்ச்சி சோதனை, வெப்ப அதிர்ச்சி சோதனை, உலர் வெப்ப சோதனை, பூச்சு தடிமன் போன்ற சோதனைகளுக்கு உட்படுத்த வேண்டும்.
மேலும், ISI தரக் குறியீடு இல்லாத துருப்பிடிக்காத எஃகு மற்றும் அலுமினியத்தால் தயாரிக்கப்பட்ட சமையல் உபகரணங்களை உற்பத்தி செய்வதும், இறக்குமதி, விற்பனை, விற்பனைக்காக காட்சிப்படுத்துவது, சேமித்து வைத்தலும் இந்த உத்தரவின்படி தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்" என்று இந்திய தரநிலைகள் பணியகம் தெரிவித்துள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க:பித்தளை பாத்திரங்களால் சருமம் பொலிவு பெறுகிறதா? ஆச்சர்யம் மிகுந்த உண்மைகள்!