உலகின் மிக மலிவு விலை கார் என மக்களால் எதிர்பார்க்கப்பட்ட டாடா நானோவின் (Tata Nano) கதை, பல திருப்பங்களைக் கொண்டது. மேற்கு வங்கத்தின் சிங்கூரில் தொடங்கிய இந்தக் கனவு, அரசியல் எதிர்ப்புகளால் குஜராத் மாநிலம் 'சனந்த்'-இல் நனவாகியது. இந்த மாற்றத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்தது அப்போதைய குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி என்பது உங்களுக்குத் தெரியுமா?
நரேந்திர மோடி (Narendra Modi), ரத்தன் டாடாவுக்கு (Ratan Tata) அனுப்பிய "வரவேற்கிறோம்" (Welcome) என்ற ஒற்றை வார்த்தை அடங்கிய குறுஞ்செய்தி (SMS) தான், டாடா நானோவை சாத்தியமாக்கியது. இதை, ரத்தன் டாடாவும் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.
நிலப் பிரச்சினை:
2006-ஆம் ஆண்டு, மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் நானோ கார் தொழிற்சாலை அமைக்க அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புத்ததேவ் பட்டாச்சாரியா தலைமையிலான அரசு 1,053 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது. தொழிற்சாலை அமைக்கும் இடத்தை மக்களிடம் இருந்து அரசு கையகப்படுத்தி, டாடா நிறுவனத்திற்கு ஒதுக்கியது.
ஆனால், விவசாய நிலத்தில் கார் தொழிற்சாலையை டாடா தொடங்குகிறது என பிரச்சினை கிளம்பியது. அந்த சூழலில், அப்போது எதிர்கட்சியாக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி பலகட்ட போராட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதில், முக்கியமாக அவர் 20 நாள்களுக்கு மேலாக மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் டாடா நிறுவனத்திற்கு அழுத்தத்தை ஏற்படுத்தியது.
மோடியின் 'வெல்கம்' மெசேஜ்:
போராட்டங்கள் தீவிரமடைய, 75% முடியும் தருவாயில் இருந்த தொழிற்சாலை கட்டுமானத்தை அப்படியே விட்டுவிட்டு, தாங்கள் மேற்குவங்கத்தை விட்டு வெளியேறுவதாக ரத்தன் டாடா அறிவித்தார். அந்த நேரத்தில் தான், நரேந்திர மோடி, ரத்தன் டாடாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பி குஜராத்துக்கு வரவேற்றார்.
டாடாவின் இந்த முடிவு, குஜராத் மாநிலத்திற்கு ஒரு வளர்ச்சிப் பாதையை ஏற்படுத்திக் கொடுத்தது. 2010-ஆம் ஆண்டு, சனந்தில் 2,000 கோடி ரூபாய் முதலீட்டில் டாடா நானோ தொழிற்சாலை தொடங்கப்பட்டது. "ஒரு ரூபாய் மதிப்புள்ள குறுஞ்செய்தி என்ன செய்யும் என்பதை இப்போது பார்க்கலாம்" என்று மோடி அப்போது கூறியிருந்தார்.