பொதுவாக வேகமாக நகர்ந்துவரும் வாழ்க்கைச் சூழலை சமாளிக்க மக்கள் அதிவேக உணவு டெலிவரி செயலிகளை (Food Ordering Apps) பயன்படுத்துகின்றனர். இதில் முக்கியமானதாகத் திகழும் சொமேட்டோ, சுவிகி பயனர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், பயனர்கள் 2 நாள்களுக்கு முன்பே உணவை முன்கூட்டி ஆர்டர் செய்யும் சேவையை சொமேட்டோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
வீட்டில் சுப நிகழ்வுகள் அல்லது வீட்டில் வயதானவர்கள் இருக்கும் நேரத்தில் உறவினர்கள் வரக்கூடிய சூழல்கள் ஏற்படும். அந்த நேரத்தில் நாம் வீட்டில் இல்லை என்றால், அதை சமாளிக்க முன்னதாகவே சொமேட்டோவில் உணவை நம்மால் ஆர்டர் செய்ய முடியும். இப்படி செய்யும்போது, குறிப்பிட்ட நேரத்தில் சொமேட்டோ டெலிவரி ஊழியர்கள் உணவை நம் வீட்டிற்கே கொண்டு வந்து தருகின்றனர்.
இதை இரண்டு மணிநேரம் முதல் இரண்டு நாள்கள் வரை எனும் கால அளவில் நம்மால் அட்வான்ஸ் உணவு ஆர்டர்களை செய்ய சொமேட்டோ அனுமதிக்கிறது. முதற்கட்டமாக சில நகரங்களில் மட்டுமே இந்த சேவை சோதனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை, பெங்களூரு, மும்பை, புனே உள்ளிட்ட நாட்டின் 30 நகரங்களில் உள்ள 35,000 உணவகங்களில் இந்த வசதி பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
சொமேட்டோவில் உணவை முன்கூட்டியே ஆர்டர் செய்வது எப்படி?
இந்த புதிய அம்சத்தின் வாயிலாக, உணவு டெலிவரி செய்யும் சொமேட்டோ ஊழியர் நாம் விரும்பும் சரியான நேரத்தில் நம் வீட்டை அடைந்து, ஆர்டர் செய்த உணவை டெலிவரி செய்வார். எனவே, இந்த அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது கீழ்வருமாறு காணலாம்.
சொமேட்டோவில் உணவை முன்கூட்டியே ஆர்டர் செய்வது எப்படி? (zomato) - எந்த நேரத்தில் உணவு உங்களுக்கு தேவைப்படும் என்பதை முதலில் திட்டமிடுங்கள்.
- உணவு அட்வான்ஸ் புக்கிங் செய்வதற்காக ஸ்லாட்டுகள் (Slots) கொடுக்கப்பட்டிருக்கும்.
- முதலில் உணவகம், தேவையான உணவுப் பொருளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- பின்னர், ‘Schedule for later’ என்பதை கிளிக் செய்து, உணவு தேவைப்படும் நேரத்தைக் குறிப்பிடவும்.
- குறிப்பிட்ட நேரத்தில் கொடுக்கப்பட்ட ஸ்லாட்டு நிரம்பி இருந்தால், தொடர்ந்திருக்கும் வேறு சமயத்தைத் தேர்வு செய்யவும்.
- இதனையடுத்து சரியான முகவரி மற்றும் வழிமுறைகள் (Instructions) ஏதேனும் இருந்தால் அதையும் தெரிவித்து பணத்தை செலுத்த வேண்டும்.
- ஆர்டர் பதிவுசெய்யப்பட்டால், சரியான நேரத்தில் நீங்கள் ஆர்டர் செய்த உணவுடன் டெலிவரி ஊழியர் உங்கள் வீட்டின் கதவைத் தட்டுவார்.
சொமோட்டாவின் இந்த புதிய அம்சத்தில், வாடிக்கையாளர்கள் உயர்தர சேவையைப் பெறுவதுடன், உணவகங்களும் பயனடையும். முன்பதிவு செய்யப்பட்ட ஆர்டர்களை, உணவகங்கள் திறன்பட நிர்வகிக்க முடியும் என நம்புகிறது சொமேட்டோ நிர்வாகம்.
தொழில்நுட்பம் சார்ந்த அண்மை செய்திகளுக்குஈடிவி பாரத் தமிழ்நாடு 'டெக்னாலஜி'பக்கத்துடன் இணைந்திருங்கள்.