உலகளவில் உள்ள ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட் கிடைக்கும், அது எப்போது கிடைக்கும் என ஆவலுடன் காத்திருக்கின்றனர். கூகுள் பிக்சல் வாடிக்கையாளர்கள், தற்போது ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். முதலில், பிக்சல் போன்களுக்கு வழங்கப்படும் மேம்படுத்தப்பட்ட அப்டேட், அதனைத் தொடர்ந்து சந்தையில் இருக்கும் முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்படும்.
எப்போதும், கூகுள் பிக்சல் போன்களை அடுத்து, சாம்சங் கேலக்சி எஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு முக்கியத்துவம் இருக்கும். ஆனால், இம்முறை, புதிய எஸ்25 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வெளியீட்டின்போது தான் ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான One UI 7 இயங்குதளம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருமா? வராதா?
இதற்கு முக்கிய காரணம், ஆண்ட்ராய்டு மற்றும் கூகுள் இயக்க முறைமைகளை சரியாக கவனித்து வரும் 9டூ5கூகுள் தளம் தான். அதாவது, கூகுள் பிக்சல் போன்களை அடுத்து, மோட்டோரோலா, ஏசூஸ், விவோ, ஒப்போ போன்ற போன்கள் வரிசையில் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது. 2024 வருடம் முடிய இன்னும் இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில், சாம்சங் தங்கள் ஸ்மார்ட்போன் வெளியீட்டுடன் புதிய One UI 7 அப்டேட்டை வழங்கலாம் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஒருவேளை சாம்சங் அப்டேட்டுகளை கொடுக்க தயாராகி விட்டதா எனத் தோன்ற வைக்கிறது, சாம்சங்கை தீவிரமாக ஆய்வு செய்யும் SammyFans தளத்தின் சிலத் தகவல்கள். அவர்கள் வெளியிட்டிருந்த ஒரு செய்தியில், "சாம்சங் கேலக்சி உரிமையாளர்களுக்கு சில உற்சாகமான செய்திகள் உள்ளன. ஆண்ட்ராய்டு 15 அடிப்படையில் உருவாக்கப்பட்ட புதிய One UI 7.0 இயங்குதள அப்டேட் வெகு தூரத்தில் இல்லை. நாங்கள் நினைத்ததை விட மிக விரைவாக வருகிறது."
"இரண்டு வெவ்வேறு ஆதாரங்களில் இருந்து தகவல்களைப் பெற்றுள்ளோம். ஒவ்வொன்றும் எங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்யும் வகையில் இருக்கின்றன. சாம்சங் மென்பொருள் மேம்பாட்டுக் குழு அக்டோபர் 2024 இறுதிக்குள் ‘பெரும்பாலும் நிலையான’ One UI 7.0 பதிப்பு கிடைக்கும்," என்று தெவித்திருப்பது கூடுதல் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
இதையும் படிங்க |
கூகுளின் இரட்டை வேடம்:
கூகுளின் ஹார்டுவேர் மற்றும் மென்பொருளின் கட்டுப்பாடு என்பது பிற OEMகளை விட, தங்கள் தயாரிப்புகளுக்கு நன்மை அளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது என்ற ரீதியில் இருப்பதாக ஃபோர்ஸ் பத்திரிகையின் சாக் டோஃப்மேன் குறிப்பிட்டுள்ளார். முன்பை விட ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வெளியீட்டில் இது மிகவும் தெளிவாகத் தெரிகிறது எனவும், இது பிக்சல் போன்களுக்கும் பிற ஆண்ட்ராய்டு போன்களுக்கும் இடையிலான தெளிவான பிரிவைக் காட்டுகிறது என்பதை தெளிவாக்கியுள்ளார்.