மதுரை: ரயில்களை விபத்து இல்லாமல் இயக்க, சாலைகள் சந்திக்கும் இடங்களில் லெவல் கிராசிங் கேட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ரயில் வரும்போது இந்த கேட்டுகள் இருபுறமும் பூட்டப்படும். இதன் மூலம் ரயிலில் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுத்தும் நிகழ்வுகள் தவிர்க்கப்பட்டு வருகின்றன.
உலக லெவல் கிராசிங் விழிப்புணர்வு நாள் போஸ்டர் (Credits - ETV Bharat Tamil Nadu) அப்போதும் கவனக்குறைவாக வேகமாக வாகனங்களை இயக்குவோர் ரயில்வே கேட்டுகளில் மோதி விபத்தக்கு ஆளாகின்றனர். மதுரை கோட்டத்தில் இதுபோன்று விபத்துகளில் சிக்கிய 74 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இது மாதிரியான குற்றச்செயல்களுக்கு ரயில்வே சட்டப்படி ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும் வாய்ப்பிருக்கிறது. ரயில்வே கேட்டுகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் ஆறு மாத சிறைத் தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
இதனை தவிர்க்கும் பொருட்டு, ரயில்வே கேட்டுகளுக்கு முன்பாக இருபுறமும் எச்சரிக்கை பலகைகள் மற்றும் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் ரயில் பாதையை கடந்து விபத்தை தவிர்க்க வேண்டும் என கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுபற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வியாழக்கிழமை (ஜூன் 6) அன்று உலக லெவல் கிராசிங் விழிப்புணர்வு நாள் அனுசரிக்கப்பட்டது. மண்டல போக்குவரத்து அதிகாரி அலுவலகம், பெட்ரோல் பங்குகள், பேருந்து நிறுத்தங்கள், சந்தை வளாகங்கள், லெவல் கிராசிங் கேட்டுகள் ஆகிய இடங்களில் கூடும் சாலை வாகன உபயோகிப்பாளர்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது.
முன்னதாக, இதற்கான பிரச்சார வாகனத்தை கோட்ட ரயில்வே மேலாளர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். மேலும் விழிப்புணர்வு பிரச்சாரம் முதுநிலை கோட்ட பாதுகாப்பு அதிகாரி மொகைதீன் பிச்சை தலைமையில் நடைபெற்றது என மதுரை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:பட்டதாரி ஆசிரியர் பணி நியமன பட்டியலுக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு! - Graduate Teacher Recruitment List