தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வனத்துறையினரிடம் சிக்காமல் போக்கு காட்டும் 'காட்டு யானை' - ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு தீவிரம்.. - Dharmapuri City Area

Wild Elephant Roaming in Dharmapuri: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வனப்பகுதியிலிருந்து ஊருக்குள் புகுந்த ஒற்றை ஆண் யானை கடந்த மூன்று நாட்களாக ஊருக்குள் வலம் வருவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Wild Elephant Roaming in Dharmapuri
தருமபுரியில் 3 நாட்களாக வலம் வரும் காட்டு யானை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 4, 2024, 7:58 PM IST

தருமபுரியில் 3 நாட்களாக வலம் வரும் காட்டு யானை

தருமபுரி: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வனப்பகுதியிலிருந்து ஒற்றை ஆண் யானை கடந்த மூன்று நாட்களாகக் கிராமப் பகுதிக்குள் புகுந்து காரியமங்கலம் வழியாக அண்ணாமலை அள்ளி, சவுளுக்கோட்டாய் பகுதியில் இருந்த கரும்புத் தோட்டத்திற்குள் புகுந்து ஜெய ஸ்ரீ என்ற பெண்ணை தாக்கியது.

யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த ஜெய ஸ்ரீ என்ற அந்தப் பெண் தருமபுரி அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், அந்த ஒற்றை ஆண் யானை திருப்பத்தூர் சாலை வழியாக சோளக்கோட்டை அருகே மான்காரன்கோட்டை பகுதியை வந்து அடைந்துள்ளது.

மான்காரன்கோட்டை பகுதியில் உள்ள கரும்புத் தோட்டம், தீவனம் பயிர், சோளத்தட்டு உள்ளிட்ட விவசாயப் பயிர்களை நாசம் செய்து, பின்பு இரவு அங்கிருந்து வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை விரட்டத் தொடங்கினர். அப்போது அந்த யானை வேறு பகுதிக்குச் சென்றது.

தொடர்ந்து வனத்துறையினர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ட்ரோன் கேமரா மூலம் யானையின் நடமாட்டத்தைக் கண்காணித்து வந்தனர். நேற்று (மார்ச்.03) மாலை 7 மணி அளவில் தருமபுரி திருப்பத்தூர் சாலையைக் கடந்து செட்டிகரை பகுதி பொறியில் கல்லூரிக்குப் பின் பகுதியில் தஞ்சம் அடைந்தது.

வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று (மார்ச்.04) விடியற்காலை தருமபுரி நகரப் பகுதியான வேடியப்பன் திட்டு, அக்கிரகாரம், சனத்குமார் ஓடை அருகே உள்ள குடியிருப்பு அதிகம் அமைந்துள்ள பகுதிக்குள் யானை புகுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

இதனை அடுத்து, வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை வேறு பகுதியில் துரத்தும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் யானை தற்போது தனக்குமார் ஓடை அருகே உள்ள புதர்ப் பகுதியில் புகுந்துள்ளதால் மூன்று வனக் குழுவினர் வெவ்வேறு பகுதிகளில் நின்று யானையின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர்.

தற்பொழுது யானை நகரப் பகுதியில் இருப்பதால், இந்த பகுதியில் உள்ள மின்சாரத்தைத் துண்டித்துள்ளனர். மேலும், யானை நகரப் பகுதிக்குள் செல்ல நேர்ந்தால் யானையை மயக்க ஊசி செலுத்திப் பிடிப்பதற்கும் வனத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர். இந்த சூழலில், தருமபுரி நகரப் பகுதியில் ஒற்றை ஆண் காட்டு யானை வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:சமூக வலைதளத்தில் வெளியான இந்தியன் 2 படக் காட்சிகள்; படக்குழுவினர் சென்னை காவல் ஆணையரிடம் புகார்!

ABOUT THE AUTHOR

...view details