சென்னை:ஆளுநரின் கீழ் செயல்படும் அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புக்கு பாதுகாவலர்கள் நியமிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா? என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி, "அண்ணா பல்கலைக்கழகம் ஆளுநரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அது ஒரு தன்னாட்சி நிறுவனம். எடப்பாடி அவர்கள் முதலமைச்சராக இருக்கும்பொழுது அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியை நியமிக்கும் உரிமையை மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.
ஆளுநரின் நிர்வாகம்:ஆக முழு பூசணிக்காய் சோற்றில் மறைப்பது போல மறைத்துவிட்டு எடப்பாடி பழனிசாமி இப்போது தமிழக அரசு மீது குற்றம் சாட்டி உள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க வேண்டியது ஆளுநரின் கீழ் இயங்கும் நிர்வாகத்தின் கடமையாகும். அங்கு பாதுகாப்பு காவலர்களை பணியில் அமர்த்தி இருக்கிறார்களா அல்லது பணிக்கு ஆள் நியமிக்கப்பட்டது போல கணக்கு காண்பித்து இருக்கிறார்களா என்பதெல்லாம் குறித்து பல்கலைக்கழகம் தெளிவுபடுத்த வேண்டும்.
இந்த சம்பவம் நடந்து ஒரு மணி நேரத்தில் குற்றவாளியை காவல்துறையினர் பிடித்துள்ளனர். அவரிடம் விசாரணை செய்து வருகிறார்கள், ஆனால் இவற்றை எல்லாம் திசை திருப்பும் வகையில் பேசிக் கொண்டிருக்கின்ற எடப்பாடி அவரது ஆட்சியில் பொள்ளாச்சியில் மாணவிகள் உள்ளிட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளானதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார்? என்பதை சொல்ல வேண்டும்.
சாட்டை கிடைக்கவில்லையா?:அண்ணா பல்கலை மாணவி கொடுத்த புகார் அடிப்படையில் உடனடியாக புலன் விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நூதன முறையில் சாட்டையில் அடித்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்கிறார். பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபோது, அவருக்கு சாட்டை கிடைக்கவில்லையா?
தற்போது அவர் லண்டன் சென்று சாட்டையை வாங்கி வந்தது போல் தெரிகிறது. தற்போது எந்த பதவியும் இல்லாமல் இருக்கும் அண்ணாமலைக்கு ஜோசியர்கள் 40 நாள் சாட்டையில் அடித்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கலாம். அதை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு அண்ணாமலை இந்த நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இது ஒரு பகுத்தறிவு இல்லாத காட்டுமிராண்டித்தனத்தை காண்பிக்கின்றது.
மணிப்பூரில் பெண்கள் பாதிப்பு:எனது அரசியல் வாழ்க்கையில் யாரும் இது போன்ற ஆர்ப்பாட்டத்தை செய்தது கிடையாது. இப்படி ஆர்ப்பாட்டம் செய்பவர் மணிப்பூரில் ஆயிரக்கணக்கான பெண்கள் பாதிக்கப்பட்ட பொழுது ஏன் அதற்காக குரல் கொடுக்கவில்லை. உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் அன்றாடம் பாலியல் வன்கொடுமை விஷயங்கள் நடைபெற்று வருகின்றன.
அங்கே எல்லாம் போகாத அண்ணாமலை இங்கு தமிழ்நாட்டில் இவ்வாறு நூதனப்போராட்டம் நடத்துவது கேலிக்கூத்தாக இருக்கிறது. திமுக ஆட்சியில் இருக்கும் வரை காலணி அணிய மாட்டேன் என்று கூறியிருக்கிறார். அப்படி என்றால் காலம் முழுவதும் அவர் காலணி அணிய முடியாது. அண்ணாமலையின் செயல் மக்களுக்கு ஒரு கேலிக்கூத்தாகவே இருக்கிறது. திமுக அரசு பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசு, பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிற அரசாக இருக்கிறது. பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் திமுகவை சார்ந்தவர் என்று குற்றம் சுமத்துகிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறானது,"என்றார்.