கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் ஆலாந்துறை அடுத்து மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலுக்கு தமிழ்நாட்டிலிருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலை ஏற்றம் செய்ய வருகின்றனர்.
மலை கோயில் அடிவாரத்திலிருந்து சுமார் 5.4 கி.மீ தூரமும், 6 ஆயிரம் அடி உயரமும் கொண்ட இந்த வெள்ளையங்கிரி மலை சன்னிதானத்திற்கு இன்று பிப்.1 முதல் மே.31 வரை பக்தர்கள் மலையேற்றம் செல்ல அனுமதிக்கப்பட உள்ளனர்.
![வெள்ளியங்கிரி மலை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/01-02-2025/23448141_velangrir-two.jpg)
இந்நிலையில், கடினமான மலையேற்றம் செல்லும் பக்தர்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
![வெள்ளியங்கிரி மலை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/01-02-2025/23448141_velangrir.jpg)
இதுகுறித்து, ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
- 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் குழந்தைகள், உயர் ரத்த அழுத்த நோய், இதயநோய் பாதிப்பு, நுரையீரல் நோய், சிறுநீரக கோளாறுகள், சர்க்கரை நோய், வலிப்பு நோய், ரத்த சோகை உள்ளவர்கள் மற்றும் இதர நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மலையேற்ற பயணத்தை மிகவும் அதிக கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும்.
- மலையேற்றத்திற்கு செல்லும் பக்தர்கள் தனியாகச் செல்லாமல் குழுவாகவும், அத்தியாவசியமான பொருள்கள் குடி தண்ணீர் உணவு மற்றும் மருந்து பொருட்களை உடன் எடுத்து செல்ல வேண்டும்.
- மலையேற்ற பகுதியில் குளிர் அதிகமாக இருப்பதால் தேவையான பாதுகாப்பு உடைகள் மற்றும் விரிப்புகள் உடன் எடுத்து செல்ல வேண்டும்.
- மலையேற்றத்திற்கு முன்பு கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ குழுவின் மூலம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருத்துவ குழுவின் அனுமதி பெற்ற பின்னரே மலையேற அனுமதிக்கப்படுவார்கள்.
- பயணத்தின் பொழுது உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க தேவையான அளவு குடிநீர் பருகு வேண்டும்.
- மலையேற்றத்தின் போது தலைவலி, நெஞ்சுவலி, தலைசுற்றல், மூச்சுத்திணறல் மற்றும் இதர அசௌகரியங்கள் ஏற்பட்டால் பயணத்தை தொடராமல் உடனடியாக கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ குழுவினை அணுகலாம் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஈடிவி பாரத் செய்தி எதிரொலி... 'கடலைகுளத்துக்கு ரோடு வரப்போகுது'... வேலூர் கலெக்டருக்கு பறந்த நோட்டீஸ்!
இதேபோல, போளுவாம்பட்டி வனத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மலை ஏற்றம் மேற்கொள்வோர் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மலை ஏற்றம் செய்பவர்கள் அடிவாரத்தில் உள்ள சிறப்பு மருத்துவ முகாமில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
![வெள்ளியங்கிரி மலை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/01-02-2025/23448141_velangrir-theree.jpg)
அனுமதிக்கப்பட்ட பகுதி வழியாக மட்டுமே செல்ல வேண்டும் வனவிலங்குகள் நடமாட்டம் மற்றும் அதிக அளவில் பனிமூட்டம் உள்ளதால் வனப்பகுதிக்குள் செல்ல பக்தர்கள் முயற்சிகள் மேற்கொள்ளக் கூடாது. ஒவ்வொரு மலைக்கும் வனப்பணியாளர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.