மதுரை: மதுரையைச் சேர்ந்த பரமசிவம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் "திருப்பரங்குன்றம் மிகவும் பிரசித்தி பெற்றது. அங்கு ஏராளமான பக்தர்கள் முழு நிலவு நாளன்று கிரிவலம் செல்வார்கள். இந்நிலையில், இந்த மலையின் உச்சியில் சிக்கந்தர் தர்ஹா அமைந்துள்ளது.
ஏற்கனவே தர்ஹா, கோயில் தொடர்பான முரண்பாடுகள் எழுந்த போது, கீழமை நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, மலையில் அமைந்துள்ள பாதையை தர்ஹாவுக்கு செல்வதற்காக பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சிக்கந்தர் தர்ஹாவில் கோழி, ஆடு பலியிட்டு கந்தூரி நடத்துகின்றனர்.
இது இந்து சைவ ஆகம விதிகளுக்கு எதிராக இஸ்லாமியர்கள் செயல்பட நினைக்கும் முயற்சியாகும். இது ஏற்கத்தக்கது அல்ல. எனவே, அங்கு கால்நடைகளை பலியிட தடை விதித்தும், திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என அழைப்பதற்கு இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இதையும் படிங்க: ஸ்பிக் நிறுவனம் கையகப்படுத்திய புறம்போக்கு நிலத்தை அரசு மீட்க வேண்டும் - நீதிமன்றம் உத்தரவு!
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று (ஜன.31) சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், “இது தொடர்பான வழக்குகள் முதல் அமர்வில் நிலுவையில் உள்ளது” என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதி இந்த வழக்கையும் முதல் அமர்வில் நிலுவையில் இருக்கும் வழக்கோடு சேர்த்து பட்டியலிட உத்தரவிட்டார்.