திருநெல்வேலி:மானூர் அருகே உள்ள தேவர்குளம் காவல்நிலைய உதவி ஆய்வாளர்கள் பவுல் மற்றும் அருள்ராஜ் ஆகிய இருவரும் குறிப்பிட்ட சமுதாய இளைஞர்கள் மீது சமுதாய ரீதியாக புகார்களை அணுகுவதாக, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பேரவைத் தலைவர் இசக்கி ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சமுதாய ரீதியாக காவலர்கள் செயல்படுவதாகக் கூறி வன்னிகோனேந்தல் என்ற ஊரில் இசக்கி ராஜா தலைமையில் ஊர் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது காவலர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, போலீசார் தடியடி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். போலீசார் தடியடி நடத்தியதில், வன்னிகோனேந்தல் பஞ்சாயத்து துணைத்தலைவர் வள்ளிநாயகம் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட இசக்கி ராஜா உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.