சென்னை:பள்ளிக்கல்வித் துறையில் மாணவர்களின் பெயர்களுடன் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்கள் 1 கோடியே 27 லட்சத்து 20 ஆயிரத்து 933 செல்போன் எண்கள் உள்ளது. இதில் பல பெற்றோருடைய செல்போன் எண்கள் தவறானதாகவும், சில எண்கள் உபயோகத்தில் இல்லாமலும் உள்ளன.
இதனால் மாணவர்களுக்கான நலத்திட்டங்களைச் செய்வதற்கும், அவர்களை தொடர்பு கொள்ளவும் முடியாமல் உள்ளது. இதனையடுத்து, மாணவர்களின் பெற்றோர் எண்களுக்கு ஒரு OTP அனுப்புவதன் மூலம், அவர்களின் செல்போன் எண்களைச் சரி பார்க்கின்றனர்.
செல்போன் எண்கள் பதிவு செய்யப்படுவது ஏன்?அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி அல்லது தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர் செல்போன் எண் அல்லது பாதுகாவலரின் எண் பதிவு செய்யப்படுகிறது.
இதன் மூலம் பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் அனைத்தும் எளிதில் தகவல் அனுப்ப உதவியாக இருக்கும். 'வாட்ஸ் அப் கேட் வே' உடன் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இணைந்து கையெழுத்திட்டு, இந்த புதிய முயற்சியை செய்து வருகிறது.
இந்த முயற்சியின் மூலமாக, அந்தந்த மாவட்டங்களில் இருக்கக்கூடிய கல்வி நிறுவனங்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலகங்கள் அனைத்திற்கும் விரைவாக தகவல் அனுப்ப முடியும். பள்ளித் தலைமை ஆசிரியர்களின் மூலம் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் எளிதில் தகவல்கள் அனுப்புவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பள்ளி மாணவர்களில் செல்போன் எண்கள் சரிபார்ப்பும் நடைபெற்று வருகிறது. பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் ஒரு கோடியே 27 லட்சத்து 20 ஆயிரத்து 933 பேர் உள்ளனர். இந்த எண்களை பள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை முறைமை EMIS இணையதளம் மூலம் OTP அனுப்பி சரி பார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் 82 லட்சத்து 86 ஆயிரத்து 63 மேற்பட்ட மாணவர்களின் எண்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 44 லட்சத்து 34 ஆயிரத்து 870 மாணவர்களின் எண்கள் சரிபார்க்கப்படவில்லை. பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் 65 சதவீதம் பேரின் எண்கள் சரிபார்க்கப்பட்டுள்ளது.
35 சதவீதம் மாணவர்களின் செல்போன் எண்கள் சரிபார்க்கப்பட வேண்டி உள்ளது. இந்த எண்களை பள்ளி திறப்பதற்கு முன்னர் சரி பார்க்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. மேலும் ஸ்மார்ட் போன் இல்லாத பெற்றோர்கள் எத்தனை பேர் என கணக்கிடப்பட்டு வருகிறது.
அந்த பெற்றோர்கள், தங்களின் பிள்ளைகள் கல்வி செயல்பாடுகளை தெரிந்து கொள்ள குறைந்த விலையிலான ஸ்மார்ட் போன்களையாவது வாங்க வேண்டும் எனவும் கல்வித்துறை தெரிவிக்க உள்ளது. மேலும் பள்ளி திறந்ததும், பள்ளி மேலாண்மை குழு மூலமாக ஸ்மார்ட் போன் இல்லாத பெற்றோர்கள் அழைக்கப்பட்டு, கல்வி செயல்பாடுகள் வாட்ஸ் அப் மூலமாக அனுப்ப வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்படவும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!