சென்னை:மாவீரர் நாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், சென்னை அசோக் நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமாக அம்பேத்கர் திடலில், நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று (நவ.27) புதன்கிழமை நடைபெற்றது. இதில், கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்துக்கொண்டு, ஈழ போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில், ஈகச்சுடரேற்றி மௌன அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் மேடையில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது, “தமிழ்நாட்டில் திருமாவளவன் ஒரு சாதிக்கான தலைவர் என்று முத்திரை குத்தும் முயற்சிகளுக்கிடையே, தமிழர்களுக்கான தலைவன் என்று அடையாளம் கண்டவர தமிழீழ விடுதலைக்காகப் போராடிய தலைவர். இன்று அவர் உயிரோடு இல்லை என்பதற்காக வாய்க்கு வந்தவற்றைப் பேசி அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர் கருத்தியல் ரீதியாக தலைவர்களை அடையாளம் காண கூடியவர்.
தமிழ்நாட்டில் எல்லோரும் தங்களது அரசியலுக்காக ஈழ விடுதலையை பேசினார்களே தவிர உண்மையை யாரும் மக்களுக்கு சொல்லவில்லை. ஈழ விடுதலை பிரச்சனைக்கு காரணம் காங்கிரஸ், காங்கிரஸ் உடன் இணைந்த திமுக மற்றும் அதன் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் என்று கூறுபவர்கள் அர்ப்பர்கள். ஏகாதிபத்ய நாடுகளின் துணை இல்லாமல் ஈழ விடுதலையை பெற முடியாது. வல்லரசு நாடுகளின் துணை இல்லாமல் புதிய நாட்டை உருவாக்க முடியாது என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
திமுக விமர்சனத்தில் கவலை இல்லை: திமுகவுக்கு எதிரான விமர்சனத்தில் நமக்கு கவலை இல்லை. அவர்கள் மீதான விமர்சனத்தை திமுக பார்த்துக் கொள்ளும். திமுகவை எதிர்த்து விமர்சிப்பது நமது பொறுப்பல்ல. திமுகவிற்கு வக்காலத்து வாங்கக்கூடிய அளவிற்கு அவர்கள் பலவீனமாகவும் இல்லை. அது நமது வேலையும் இல்லை. திமுக எதிர்ப்பு திராவிட கருத்தியல் எதிராக மாறும் பொழுது நாம் குறுக்கிட வேண்டும்.