தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக இந்தியா கூட்டணி வினையாற்ற வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்! - THIRUMAVALAVAN

யுஜிசி வரையறுத்துள்ள புதிய விதிகள் மாநில உரிமைகளுக்கு எதிராக இருக்கிறது. இதனை எதிர்த்து, தேசிய அளவில் இந்தியா கூட்டணி எதிர்வினை ஆற்ற வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன்
விசிக தலைவர் திருமாவளவன் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 12, 2025, 5:54 PM IST

சென்னை:பொறுப்புள்ள எதிர்க்கட்சி, இடைத்தேர்தல் புறக்கணிப்பு நிலைப்பாடு எடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தொடர்ந்து, அவர்களுக்கு பானை சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதை அடுத்து தேர்தல் ஆணையம் இந்த அங்கீகாரத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அளித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதையொட்டி, விசிக தலைவர் திருமாவளவன் இன்று (ஜனவரி 12) ஞாயிற்றுக்கிழமை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

திருமாவளவன் பேட்டி (ETV Bharat Tamilnadu)

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது, “விடுதலை சிறுத்தைகள் கட்சியை அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அங்கீகாரத்தை வழங்கிய சிதம்பரம், விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி. மேலும், இதற்கு உற்ற துணையாக இருந்த திமுக மற்றும் அதன் தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கம் நன்றி. விசிக சமூக நீதிக்கான மக்கள் இயக்கம் என்பதை அனைவரும் மனப்பூர்வமாக ஏற்று கொண்டுள்ளனர்.

யுஜிசி புதிய விதிகள்:

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் வெற்றிக்கு விசிக உறுதூணையாக இருந்து பணியாற்றுவோம். யுஜிசி வரையறுத்துள்ள புதிய விதிகள் மாநில உரிமைகளுக்கு எதிராக இருக்கிறது. மேலும், உயர் கல்வியில் பல்கலை துணைவேந்தர்களை மட்டுமின்றி பேராசிரியர்கள் பொறுப்புகளையும் நியமனம் செய்கிற முழுமையான அதிகாரத்தை மத்திய அரசே எடுத்துக் கொள்ளும். இதனை எதிர்த்து, இந்திய அளவில் இந்தியா கூட்டணி எதிர்வினை ஆற்ற வேண்டும். அதற்கான முன் முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க:திராவிடம், பெரியார் குறித்து சீமான் கூறியது அவரது சொந்தக் கருத்தே! - நா.த.க.வின் செகதீச பாண்டியன் அதிரடி அறிக்கை!

பொறுப்புள்ள எதிர்க்கட்சி, இடைத்தேர்தல் புறக்கணிப்பு நிலைப்பாடு எடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவர்களுக்கான பலவீனத்தை வெளிப்படுத்துவதாகத் தான் கருதுகிறோம். வெற்றியோ, தோல்வியோ அதை எதிர்கொள்வது தான் அதிமுகவுக்கு உள்ள சிறப்பு. ஆனால், விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணித்தார்கள். தற்போது ஈரோடு கிழக்கு தேர்தலையும் புறக்கணித்திருக்கிறார்கள். இது மறைமுகமாக பாஜகவின் நிலைப்பாட்டுக்கு ஒத்துழைப்பதாக அமையும்.

அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு:

அதிமுகவை பின்னுக்கு தள்ளி நாங்களே இரண்டாவது பெரிய கட்சி என்பதற்கான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுக்கும். பாஜக ஆதரவுடன் நிறுத்தப்படுகின்ற வேட்பாளர்களுக்கு அதிமுகவின் நிலைப்பாடு சாதகமாக அமையும். எஸ்சி, எஸ்டி பிரிவில் கிரிமிலேயர் பிரிவை கொண்டு வருவதை கடுமையாக எதிர்க்கிறோம். ஓபிசிக்கே கிரிமிலேயர் கூடாது என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு. தமிழ்நாடு அரசு கிரீமிலேயரை(Creamy layer) ஒருபோதும் ஏற்காது, அதற்கு ஆதரவு தெரிவிக்காது.

மதுரை அரிட்டாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதை மாற்றிக் கொள்ள வேண்டும். டங்ஸ்டன் சுரங்கத்தை தடுப்பதற்கு தனி சட்டம் கொண்டு வரவேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். தமிழ்நாடு அரசு பழைய ஓய்வூதிய திட்டதிற்கு பதிலாக, புதிய மாற்று ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க முன் முயற்சி எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details