சென்னை: வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர்கள் விஜய், மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி சவுத்ரி என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள கோட் படம் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
குறிப்பாக சினிமாவில் இனி நடிக்கப்போவதில்லை, ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ள படத்தை முடித்துவிட்டு முழுமையாக அரசியலுக்குள் பயணிப்பேன் என்று விஜய் தெரிவித்திருந்தார். அதன்படி, கோட் படத்துக்கு பிறகு இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும் விஜய் நடிப்பார் என்று சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இதனால், கோட் படத்திற்கு விஜய் ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்திருந்தனர். இந்நிலையில், இந்த படம் இன்று வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. அடுத்தடுத்த நாட்களில் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் எப்படி இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் கிளம்பியுள்ளது.
வழக்கமாக விஜய் படத்தில் அரசியல் கருத்துக்கள் இடம்பெற்று ஒவ்வொரு ரிலீஸின் போதும் ஏதாவதொரு பிரச்சினை கிளம்பும். ஆனால், விஜய் அரசியலுக்கு வந்த பிறகு வெளியாகியுள்ள இந்த படத்துக்கு அதுபோன்ற பிரச்சினைகள் எதுவும் பெரிதாக தலை தூக்கவில்லை.
இந்நிலையில், தற்போது கோட் படத்தின் தலைப்பின் மீது விமர்சனம் எழுந்துள்ளது. '' the greatest of all time '' என்பதை சுருக்கி '' GOAT '' என்று இந்த படம் அழைக்கப்படுகிறது. இதனை விமர்சித்துள்ள விசிக எம்பி ரவிக்குமார், விஜய் படத்தின் தலைப்பு சனாதனத்தை குறிப்பிடுவதாக கூறியுள்ளார்.