சென்னை: ஆந்திரபிரதேசம் மாநிலம் அனந்தபூர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். இவர் சென்னை, வடபழனியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன் தினம் அவரது நண்பர் பாஸ்கர் என்பவருடன் வடபழனி துரைசாமி சாலையில் சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது, காரில் வந்த மர்ம நபர்கள் தினேஷை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளனர். இது குறித்து அவரது நண்பர் பாஸ்கர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் அடிப்படையில், வடபழனி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்குள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சிசிடிவி பதிவுகள் அடிப்படையில், தினேஷை கடத்திச் சென்ற வெள்ளை நிற கார் மற்றும் பதிவு எண்ணை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், ஜோலார்பேட்டை திருப்பதி ரோடு, மன்னார் பொலுரு நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த வெள்ளை காரை மடக்கிப் பிடித்த போலீசார், கடத்தப்பட்ட தினேஷை பத்திரமாக மீட்டு காரை பறிமுதல் செய்தனர்.