காஞ்சிபுரம்:பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் 900-க்கும் மேற்பட்ட நாட்களாக போராடி வருகின்றனர். இந்த நிலையில், போராட்டக்காரர்களைத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் சந்தித்துப் பேசவுள்ளார்.
சென்னை விமான நிலையத்திற்கு மாற்றாகக் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க மத்திய அரசு அறிவித்து, அதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.
ஆனால், பரந்தூர் பகுதியில் விமான நிலையம் வந்தால் விளைநிலங்களும், குடியிருப்புகளும், நீர்நிலைகளையும் அழிந்து போகும் என்பதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை அப்பகுதியினர் முன்னெடுத்து வருகின்றனர்.
முன்னதாக, பரந்தூர், தண்டலம், மகாதேவி, நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் முற்றிலும் கையகப்படுத்தப்படவுள்ளதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் 900 நாட்களுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர்.
இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வரும் சூழ்நிலையில், தற்போது தவெக தலைவரும், நடிகருமாக விஜய் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்களை இன்று நேரில் சந்தித்துப் பேசவுள்ளார். அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.