கொல்கத்தா: கொல்கத்தாவின் கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் 31 வயது முதுகலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் முதுகலை படித்து வந்த 31 வயதான பெண் பயிற்சி மருத்துவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி அன்று இரவு கேம்பஸில் உள்ள கருத்தரங்கில் ஒய்வு எடுப்பதற்காக சென்றிருந்தார். பின்னர் மறுநாள் காலையில், சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
போலீஸ் விசாரணையில், பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும், சம்பவம் நடந்த அடுத்த நாளே தன்னார்வலர் சஞ்சய் ராய் கைதானார். ஆனால், இந்த விவகாரத்தில் போலீசாரின் விசாரணையில் குளறுபடி இருந்ததாக உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடியது. அதற்கு பிறகு வழக்கு சிபிஐ-க்கு மாறியது.
நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கில் வழக்கில் பிஎன்எஸ் பிரிவு 64,66, 103/1 ஆகிய பிரிவுகளின் கீழ் சஞ்சய் ராய் குற்றவாளி என கடந்த 18 ஆம் தேதி கொல்கத்தா மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
ஆயுள் தண்டனை
முன்னதாக, இந்த வழக்கின் விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை வழங்குமாறு மத்திய புலனாய்வுத் துறை கோரியது. இந்நிலையில், குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்து கொல்கத்தா மாவட்ட நீதிமன்றம் இன்று (ஜன.20) தீர்ப்பு வழங்கியுள்ளது.
அப்போது தண்டனைகள் குறித்து குற்றவாளி சஞ்சய் ராய் தரப்புக்கு விளக்கமளித்த நீதிமன்றம், குற்றவாளிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மற்றும் நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை ஏற்கனவே நீதிமன்றம் தெரிவிக்கப்பட்டதாக கூறியது.
'நான் நிரபராதி'
அப்போது சஞ்சய் ராய், '' நான் எதுவும் செய்யவில்லை. இந்த வழக்கில் என்னை பொய்யாக சிக்க வைத்துள்ளனர். பெண் மருத்துவரை நான் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லவில்லை. நான் நிரபராதி. நான் சித்திரவதை செய்யப்பட்டேன் என்று ஏற்கனவே உங்களிடம் (நீதிபதியிடம்) கூறினேன்'' என்றார்.
குற்றவாளி தரப்பு வழக்கறிஞர், '' வழக்கு அரிதிலும் அரிதானது என்றாலும், சீர்திருத்தத்திற்கு வாய்ப்பு இருக்க வேண்டும். குற்றவாளிக்கு மறுவாழ்வளிக்க தகுதியற்றவர் என்பதை நீதிமன்றம் விளக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர் ஏன் சீர்திருத்தத்திற்கு தகுதியற்றவர் மற்றும் சமூகத்திலிருந்து முற்றிலும் அகற்றப்பட வேண்டும் என்பதற்கான காரணங்களை அரசு தரப்பு வழக்கறிஞர் ஆதாரத்துடன் தெரிவிக்க வேண்டும்'' என்றார். பாதிக்கப்பட்டவரின் குடும்ப வழக்கறிஞர் தரப்பில், மரண தண்டனையை அதிகபட்ச தண்டனையாக நான் விரும்புகிறேன் என்றார்.
இந்நிலையில், கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனையும், 50,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.