புதுக்கோட்டை:திருச்சி, புதூர் வண்ணாரப்பேட்டை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் துரை என்கிற துரைசாமி. இவர் மீது கொலை, கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி என 60க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக இருந்த துரைசாமியை போலீசார் தேடிவந்தனர்.
துரைசாமி வழக்கறிஞர் பிரபாகரன் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu) இந்த நிலையில், நேற்று புதுக்கோட்டை - பட்டுக்கோட்டை சாலையில் உள்ள திருவரங்குளம் தைலமர காட்டுப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாக ஆலங்குடி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், ஆலங்குடி காவல்துறை ஆய்வாளர் முத்தையன் தலைமையில், காவல் உதவி ஆய்வாளர் மகாலிங்கம் உள்ளிட்ட நான்கு போலீசார் காட்டுப் பகுதியில் தேர்தல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது ரவுடி துரைசாமி கூட்டாளியுடன் பதுங்கி இருந்தது தெரிய வந்துள்ளது. அவரைப் பிடிக்க போலீசார் சென்றபோது, துரைசாமி போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன், உதவி ஆய்வாளர் மகாலிங்கத்தை ஆயுதத்தால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில் காவல் ஆய்வாளர் முத்தையன், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
அதற்குப் பிறகும் துரைசாமி போலீசாரைத் தாக்க முயன்ற நிலையயில், அவரை நோக்கி ஆய்வாளர் முத்தையன் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த துரைசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த உதவி ஆய்வாளர் மகாலிங்கம், ஆலங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, சுட்டுக் கொல்லப்பட்ட துரைசாமியின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி துரையின் மரணத்திற்கு நீதி கேட்டும், துரைசாமியின் என்கவுண்டரின் போது துரைசாமியின் உடன் இருந்த அவரது அக்கா மகன் பிரதீப் குமாரை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்றும், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, போராட்டக்காரர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.
இதையடுத்து, புதுக்கோட்டை கோட்டாட்சியர் ஐஸ்வர்யா மற்றும் வட்டாட்சியர் பரணி இருவரும் மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த உடலை ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்திய நிலையில், ரவுடி துரைசாமியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவர் அணிந்திருந்த தங்கச் செயின், இரண்டு தங்க மோதிரங்கள், ஒரு தங்க தோடு, ஒரு ருத்ராட்ச மாலை உள்ளிட்டவற்றை காவலர்கள் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், பரிசோதனை செய்யப்பட்ட ரவுடி துரைசாமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது ரவுடி துரைசாமியின் உடலைக் கண்டு உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கதறி அழுதனர். மேலும், இந்த என்கவுண்டர் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும், சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும், மனித உரிமை ஆணையம் இந்த வழக்கை நேரடியாக விசாரணை செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளையும் உறவினர்கள் வைத்தனர்.
காவல்துறை என்கவுண்டர் குறித்து பேசிய துரைசாமியின் வழக்கறிஞர் பிரபாகரன், “மற்றொரு வழக்கு சம்பந்தமாக கோயம்புத்தூருக்குச் சென்ற துரைசாமி காவல்துறையினரால் கடத்திச் சென்று என்கவுண்டர் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட இடம் மற்றும் உறவினர்களிடம் நீதித்துறை மாஜிஸ்திரேட் விசாரணை இல்லாமல், கோட்டாட்சியர் வைத்து விசாரணை நடத்தியது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று துரைசாமி வழக்கறிஞர் குற்றம் சாட்டினார்.