திருச்சி:2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சியினரும் தங்களது பணிகளைத் தொடங்கிவிட்டனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தொகுதிப் பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை குழுக்கள் என்று அமைத்து தேர்தல் பணியைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.
தமிழ்நாட்டில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளை முழுமையாகக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் திமுக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் திமுக சார்பாகத் தேர்தல் பணிகளை தற்போது தொடங்கிவிட்டனர்.
வார்டு, பகுதி வாரியாக பொதுமக்களைச் சந்தித்து திமுக ஆட்சியில் மக்களுக்குச் செய்த திட்டங்களை எடுத்துரைத்து ஆதரவு கேட்டு வருகிறார்கள். அதே போன்று அதிமுகவில் கூட்டணியைப் பலப்படுத்துவது, புதிய நிர்வாகிகளை தங்களது கட்சியில் இணைப்பது, உள்ளிட்ட பல்வேறு தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.
அதேசமயம் விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினரும் தங்களது தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளனர். குறிப்பாகத் தமிழ்நாட்டில் இருக்கும் 2 பெரிய கட்சிகளும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைத் தீவிரமாக நடத்தி வருகிறார்கள். இன்னும் சில நாட்களில் தொகுதிப் பங்கீடு முடிந்ததும், வேட்பாளர்கள் தேர்வு நடைபெற உள்ளது.
இதே போன்று பாஜகவினரும் கூட்டணியைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளைத் தீவிரமாகச் செய்து வருகிறார்கள். குறிப்பாக நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜகவின் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். இதனைத் தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் - என் மக்கள் என்ற நடைப்பயணம் மூலம் தொகுதி வாரியாக மக்களைச் சந்தித்து, மோடி அவர்கள் ஆட்சியில் செய்த திட்டங்கள், சாதனைகள் என அனைத்தையும் எடுத்துக்காட்டி ஆதரவு திரட்டி வருகிறார்.