சென்னை:பொதுமக்கள் மற்றும் பல்வேறு தொழில் துறைகளுக்கு இலவச மற்றும் குறைந்த விலை மின்சாரம் வழங்க நடப்பு நிதியாண்டில் 15,332 கோடி ரூபாய் மானியத்தை மின் வாரியத்திற்கு விடுவிக்குமாறு தமிழக அரசுக்கு ஒப்புதல் அளித்து, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு வீட்டு இணைப்புகளுக்கு 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்கி வருகிறது. இதைத் தவிர்த்து விவசாயம், குடிசை வீடுகளுக்கு இலவசமாகவும் மின்சாரம் வழங்கி வருகிறது. அதேபோல, விசைத்தறி உள்ளிட்ட பிரிவுகளுக்குக் குறைந்த கட்டணத்திலும் வழங்கப்படுகிறது. இதற்காக மின் வாரியத்திற்கு ஏற்படும் செலவை, தமிழக அரசு ஆண்டுதோறும் மானியமாக வழங்குகிறது.
இந்த மானியத்தைக் கணக்கிட்டு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு, மின் வாரியம் அறிக்கை சமர்ப்பிக்கும். அதை மதிப்பீடு செய்து ஆணையம் மானிய தொகையை நிர்ணயிக்கும். இந்த நிதியை வழங்க அரசுக்கு உத்தரவிடும். அதன்படி, நடப்பு 2024 - 25ஆம் நிதியாண்டில், ரூ.15,332 கோடி மானியம் விடுவிக்கத் தமிழ்நாடு அரசுக்கு, ஆணையம் உத்தரவிட்டுள்ளது.