சென்னை:கொருக்குப்பேட்டை ஜே ஜே நகர் மெயின் ரோடு பகுதியில் எம்ஜிஆரின் 108-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்டம் சார்பில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆர்.கே நகர் மேற்கு பகுதி துணை செயலாளர் சுயம்பு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அக் கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலாளரும், திரைப்பட நடிகையுமான கௌதமி, வடசென்னை மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
கூட்டத்தில் கௌதமி பேசியதாவது:
தமிழகத்தை தீயசக்தியிடம் இருந்து மீட்கவும், மக்களின் உரிமையை மீட்கவும் கடந்த 1972 ஆம் ஆண்டு புரட்சி தலைவர் எம்ஜிஆர் அதிமுகவை உருவக்கினார். எம்ஜிஆரின் 10 ஆண்டு ஆட்சி காலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கினார். அதில் உலகமே போற்றும் திட்டமாக சத்துணவு திட்டம் இருந்து வருகிறது. தமிழகத்தில் மக்களின் வறுமை நிலையை அறிந்து மக்கள் தனக்கு அதிகாரத்தை வழங்கிய பின்னர் சத்துணவு திட்டத்தை செயல்படுத்தினார்.
இதேபோல் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு இலவச மடிகணிணி, மோட்டார் சைக்கிள் மானியம் என பல திட்டங்களை செயல்படுத்தினார். தனி மனித வாழ்க்கையில் போராட வேண்டி இருந்தாலும் வயிறு காலியாக இருந்தால் போராட முடியாது என்பதை அறிந்து அம்மா உணவகம் திட்டத்தை செயல்படுத்தினார். இதேபோல் எடப்பாடி பழனிசாமி பல மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தினார். ஆனால் ஆட்சி மாற்றம் வந்த உடன் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி அறிவித்த அனைத்து திட்டங்களும் முடக்கப்பட்டன.
தமிழகத்தில் தற்போது பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. அனைத்து தரப்பினரும் பயம், பதட்டத்துடனே வாழ்ந்து வருகின்றனர். விலைவாசி உயர்வு, வீட்டு வரி உயர்வு என பல இன்னல்களை அனுபவித்து வருகிறோம். தற்போது ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த எந்த திட்டங்களும் தமிழகத்தில் இல்லை. உங்கள் கையில் இருக்கும் பெரிய சக்தி உங்களுடைய ஓட்டு தான். அதனை வைத்து தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நல்லாட்சி அமைய வாக்களிக்க வேண்டும். புரட்சி தலைவி ஜெயலலிதா ஆட்சி காலத்தில் குழந்தைகள் கையில் பேனாவும், நோட்டும புத்தகங்களும் இருந்தது. ஆனால் தற்போது ஒரு கையில் மதுபாட்டிலும், ஒரு கையில் போதை பொருளும் இருக்கும் சூழ்நிலையே இருந்து வருகிறது என அவர் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கௌதமி, "நடிகர் சத்யராஜின் மகள் திமுகவில் இணைந்திருப்பது அவருடைய விருப்பம். எந்த கட்சியில் வேண்டுமானாலும் சேரலாம் ஆனால் என்ன செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். அதிமுக ஆட்சி காலத்தில் கொரோனாவிற்கு பிறகு இக்கட்டான கால நிலையிலும் அப்போதைய முதல்வரும், அதிமுக பொதுசெயலாளருமான எடப்பாடி பழனிசாமி பொங்கல் தொகுப்பில் ரூ.2500 பணம் வழங்கினார். ஆனால் மக்களுக்கு பல இன்னல்களை தரும் அரசு மகளிர் உரிமை தொகை வழங்குவதில் பல தடைகளை வைத்தது. மேலும் பொங்கல் தொகுப்பில் பணம் இல்லை என கூறிவிட்டு மக்களை வஞ்சிக்கிறது" என தெரிவித்தார்.