தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி மாற்றம் ஏன்? - சபாநாயகர் அப்பாவு விளக்கம்! - Appavu - APPAVU

TN assembly speaker Appavu: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டுத்தொடர் ஜூன் 20ஆம் தேதி தொடங்குவதாகவும், விளங்கோடு தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளர் நாளை பதவி ஏற்க உள்ளதாகவும் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் சட்டபேரவைத் தலைவர் அப்பாவு
செய்தியாளர்கள் சந்திப்பில் சட்டபேரவைத் தலைவர் அப்பாவு (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 11, 2024, 4:31 PM IST

Updated : Jun 11, 2024, 9:51 PM IST

திருநெல்வேலி:தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இன்று (செவ்வாய்க்கிழமை) நெல்லை அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜூன் 24ஆம் தேதி நடைபெறுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தேன்.

சட்டபேரவைத் தலைவர் அப்பாவு அளித்த பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இதற்கிடையில், விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், பேரவை கூட்டத்தொடர் முன்கூட்டியே ஜூன் 20ஆம் தேதி தொடங்கும். மேலும், கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தாரகை கத்பட் சட்டப்பேரவை உறுப்பினராக நாளை (புதன்கிழமை) பதவி ஏற்கிறார்.

இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சி பேரவை அலுவலகத்தில் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து, சட்டப்பேரவை அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. மாஞ்சோலை தேயிலைத் தோட்ட விவகாரத்தைப் பொறுத்தவரை, தொழிலாளர்களின் நலன் குறித்து இந்த அரசு நல்ல முடிவை எடுக்கும்.

தொழிலாளர்களின் சம்பளம் குறித்து நாங்கள் போராட்டத்தில் பங்கேற்றோம். ஆனால், தற்போது சம்பளம் பிரச்னை அல்ல, பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த வனப்பகுதியில் நமது தொழிலாளர்கள் இருந்தால் மட்டுமே வனத்திற்கும் நல்லது, நமக்கும் நல்லது. கேரள வனப்பகுதியில் தீவிரவாதிகள் பயிற்சி எடுத்ததாக தகவல் வந்தது. எனவே, தொழிலாளர்கள் அங்கு இருப்பது தான் நல்லது.

இந்த விவகாரத்தில் அரசு கொள்கை முடிவாக தேயிலைத் தோட்டத்தை கையகப்படுத்த முடிவெடுக்க வேண்டும். முழுமையாக மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்து பகுதிகளை வனத்துறையிடம் ஒப்படைப்பது சரியாக இருக்காது. அந்த வனப்பகுதி தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். தொழிலாளர்கள் அங்கே தொடர்ந்து வேலை செய்வதற்கு வாய்ப்பை வழங்க வேண்டும்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில், மாஞ்சோலை விவகாரத்தை முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் செல்வேன். அங்கு தொழிலாளர்களுக்கு குடிநீர், மின்சாரம் இணைப்பை துண்டிக்க முடியாது. அப்படி துண்டித்தால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

சாமானிய மக்களுக்கு சிறு பிரச்னை ஏற்பட்டாலும், தமிழ்நாடு அரசு அதை நிவர்த்தி செய்யும். மத்திய அரசிடம் இருந்து நிதி எதிர்பார்க்காமல் தமிழ்நாடு அரசு அனைத்து உதவிகளையும் செய்து விடுகிறது. மேலும், சொரிமுத்து அய்யனார் கோயிலுக்குச் செல்வதற்கு வனத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் பக்தர்கள் செல்வதற்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் மட்டுமே தேர்தல் விதிமுறைகள் இருக்கும் என்று தேர்தல் அதிகாரி சொன்னதன் அடிப்படையில், அதை கவனத்தில் கொண்டு அறிவிப்புகள் வெளியாகும். மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் அரசின் நலத்திட்ட அறிவிப்பு நிறுத்தப்படும்" என சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார்.

இதையும் படிங்க:புளியமரத்தை அகற்றக் கோரி போராட்டம் நடத்த முடிவு.. நாட்றம்பள்ளி அருகே நடந்தது என்ன?

Last Updated : Jun 11, 2024, 9:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details