தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதல்வர் தொகுதியில் பயன்பாட்டிற்கு வரும் சிறப்பு மருத்துவமனை.. தமிழக அரசு தகவல்! - kolathur special hospital - KOLATHUR SPECIAL HOSPITAL

Special hospital in kolathur: சென்னை கொளத்தூர் தொகுதி பெரியார் நகரில் ரூ.110 கோடியில் தரைதளம் மற்றும் 6 தளங்களுடன் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் புதிய சிறப்பு மருத்துவமனை விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பணிகள் நடைபெறும் மருத்துவமனை கட்டடம் புகைப்படம்
பணிகள் நடைபெறும் மருத்துவமனை கட்டடம் புகைப்படம் (credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 11, 2024, 4:18 PM IST

சென்னை:முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் தொகுதியில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காகச் சிறப்பு மருத்துவமனை கட்டப்படும் என முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்து அதற்கான அடிக்கல் நாட்டுப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த மருத்துவமனையின் கட்டுமான பணிகள் 75 சதவிகிதம் அளவுக்கு முடிவடைந்து உள்ளது. இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த புதிய சிறப்பு மருத்துவமனை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய மூன்று அடுக்கு சிறப்பு மருத்துவமனை கட்டடம் ரூ.55.07 கோடி மதிப்பீட்டில் கட்ட அக்டோபர் 22 அன்று உத்தரவிட்டு இக்கட்டடம் கட்டுவதற்காக மார்ச் 23 அன்று அடிக்கல் நாட்டினார்கள்.

இப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், மேலும் கூடுதலாக மூன்று தளங்கள் கட்ட ரூ.54.82 கோடி மதிப்பீட்டிற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. கூடுதல் தளங்கள் கட்டும் பணிகளை முதலமைச்சர் மார்சி 2024 அன்று அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை மூலம் கட்டப்படும் இந்த புதிய மருத்துவமனை கட்டடம் மொத்தம் ஏறத்தாழ ரூ.110 கோடி மதிப்பீட்டில் 2,12,890 சதுர அடி (19,778 ச.மீ) பரப்பளவில் தரை மற்றும் ஆறு தளங்களுடன் 556 படுக்கை வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனை கட்டடம் மிக விரைவில் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும்.

இந்த மருத்துவமனை கட்டடத்தின் தரைதளத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவுகள், நவீன சலவையகம், மத்திய கிருமி நீக்கல் துறை, வாகனம் நிறுத்துமிடம் போன்ற வசதிகள் இடம் பெறும். முதல் தளத்தில் பிரசவ வார்டுகள், மறுவாழ்வு வார்டுகள், இரத்த வங்கி, மூன்று அறுவை சிகிச்சை அரங்கங்கள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய வார்டுகள் போன்ற வசதிகள் அமைக்கப்படுகின்றன.

2 மற்றும் 3ஆம் தளத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட வார்டு, மருத்துவ வார்டுகள், தனி அறைகள் மற்றும் முழு உடல் பரிசோதனை பிரிவு, குழந்தைகள் வார்டு, பிரசவ வார்டு, தீவிர மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன.

4, 5 மற்றும் 6 ஆம் தளங்களில் சிறப்பு பிறநோயாளிகள் பிரிவு, ஆய்வகம், நீரிழிவு வார்டு, இரையகக் குடலியவியலுக்கான வார்டுகள், இதயவியல் வார்டுகள், கேத் ஆய்வகம் மற்றும் நான்கு அறுவை சிகிச்சை அரங்கங்கள், புற்றுநோய் வார்டு, கூட்ட ரங்கம் ஆகியன முழு அறை கலன்கள் வசதிகளுடன் அமைக்கப்படுகிறது.

மேலும், இக்கட்டடத்தின் அனைத்துத் தளங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பிடம், பொதுக் கழிப்பிடம், நான்கு மின்தூக்கிகள், 3 படிக்கட்டுகள், சாய்வு தளம், கழிவுநீர் சுத்திகரிப்பு வசதி, தீயணைப்பு உபகரணங்கள் போன்ற பிற வசதிகளும் அமையக்கூடிய வகையில் இக்கட்டடப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இந்த புதிய சிறப்பு மருத்துவமனை விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

முதலமைச்சரின் தமிழ்நாடு அரசின் பொதுப் பணித்துறையின் மூலம் தென்சென்னை பகுதி மக்களுக்குச் சிறப்பான மருத்துவ வசதிகளை அளிக்க வேண்டும் எனும் குறிக்கோளுடன் கிண்டியில் கலைஞர் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையைக் உருவாக்கியுள்ளதுபோல, வடசென்னை மாவட்ட மக்களுக்கும் குறிப்பாக, கொளத்தூர் தொகுதி மக்களுக்கும், சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கும் சிறப்பான மருத்துவ வசதிகளை அளிக்கத்தக்க மருத்துவ மனையாக அனைத்து மருத்துவ வசதிகளுடன் பெரியார் நகர் மருத்துவமனையை மேம்படுத்தி வருகிறார்கள்.

முதலமைச்சர் நிறைவேற்றிவரும் இத்தகைய மருத்துவ மேம்பாட்டுப் பணிகள் மூலம் தமிழ்நாடு அரசின் மருத்துவத் துறை இந்தியாவிலேயே மிகச் சிறந்த மருத்துவ வசதிகள் கொண்ட துறையாகவும் மருத்துவ சேவைகள் வழங்கும் துறையாகவும் வளர்ச்சி பெற்று முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. தன்னைத் தேர்ந்தெடுத்த தொகுதி மக்களின் நலனில் எந்நாளும் அதீத அக்கறை கொண்டு அவர்களுடைய தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சவுக்கு சங்கர் வீடு, அலுவலகத்திற்கு சீல்.. மேலும் ஒரு வழக்கு பாய்ந்தது - காரணம் என்ன? - Savukku Shankar

ABOUT THE AUTHOR

...view details