சென்னை: தமிழ்ப் புதல்வன் திட்டம் வாயிலாக, அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று கல்லூரிகளில் சேரும் ஏறத்தாழ 3 லட்சத்து 28 ஆயிரம் கல்லூரி மாணவர்கள் மாதந்தோறும் ரூ.1,000 பெற்றுப் பயனடைவார்கள்.
இதுகுறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது, “மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் , மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் (புதுமைப் பெண் திட்டம்) என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளிகளில் பயின்று, இந்திய அரசு, தமிழ்நாடு அரசு, பல்கலைக்கழக மானிய குழுவால் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்குவதற்கு ஆணைகள் வெளியிடப்பட்டன.
அதனை தொடர்ந்து, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 2024-2025 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை உரையில், நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர், “அரசுப் பள்ளிகளில் பயின்ற, ஏழை, எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடவும், அரசுப் பள்ளி மாணவரின் உயர்கல்விச் சேர்க்கையை உயர்த்திடவும் தமிழ்ப் புதல்வன் எனும் ஒரு மாபெரும் திட்டம் வரும் நிதியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும்.
இத்திட்டத்தின் கீழ், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் பாடப் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்களது கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்” என அறிவிக்கப்பட்டது.