திருச்சி: அது 2006ம் ஆண்டு. ஆசியாவின் உச்சபட்ச விளையாட்டரங்கில் பாலின சோதனையில் தோல்வியடைந்ததாகக் கூறி பதக்கம் பறிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீராங்கனை சாந்தி. 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி வென்றிருந்த நிலையில், நாடு திரும்பும் வரையிலும் கூட அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. இன்று வினேஷ் போகத்திற்காக நாடே துயரத்தில் ஆழ்ந்திருப்பது போன்ற சம்பவம் 18 ஆண்டுகளுக்கு முன்பும் நிகழ்ந்திருந்தது. இந்த குழப்பங்களுக்கெல்லாம் முன்னதாகவே தமிழ்நாடு அரசு சார்பில் 10 லட்ச ரூபாய் பரிசு அறிவித்திருந்தது.
முதலமைச்சராக இருந்த கருணாநிதியை சந்திப்பதற்காக தலைமைச் செயலகத்திற்கு வந்து கொண்டிருந்தார் சாந்தி. அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தகவலை முதலமைச்சர் கருணாநிதிக்கு தெரிவித்திருந்தனர் அதிகாரிகள். பதக்கம் இல்லாதவருக்கு பரிசுப்பணம் கொடுப்பதா? என்ற கேள்வி எழுந்த போது, ஓடியது அந்த கால்கள் தானே என கூறிய கருணாநிதி. சாந்தியை நேரில் அழைத்து பரிசு வழங்கினார்.
18 ஆண்டுகளுக்குப் பின்னர் வரலாற்றின் அந்த சம்பவம் போன்ற ஒன்று மீண்டும் அரங்கேறியிருக்கிறது. இந்த நிலையில், தூத்துக்குடி எம்பி கனிமொழி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அல்ஜீரியா நாட்டு குத்துச்சண்டை வீராங்கனை இமானே கெலிஃப்பை ஆதரித்து சில தினங்களுக்கு முன் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்தப் பதிவில், "தலை நிமிர்ந்து நிற்கும் பெண்களின் பெண்மை எப்போதுமே கேள்விக்குறியாகவே இருக்கும். எங்கள் தடகள வீராங்கனை சாந்திக்கும் இப்போது இமானே கெலிஃப் ஆகிய உங்களுக்கும் அப்படிதான். உங்களின் வலிமையும் உறுதியும் எங்கள் அனைவருக்கும் ஊக்கமளிக்கிறது" என பதிவிட்டிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, ஆசிய விளையாட்டு வீராங்கனை சாந்தி செளந்தரராஜனை தொடர்புகொண்ட ஈடிவி பாரத் ஊடகம் இதுகுறித்து பேட்டி கண்டது. அப்போது அவர், "2006 ஆம் ஆண்டு தோஹாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் வெள்ளி பதக்கம் வாங்கியுள்ளேன். அதுதான் என்னுடைய கடைசி போட்டி. பாலின சர்ச்சை தொடர்பான பரிசோதனை உலக அரங்கில் தவறுதலான எடுத்துக்காட்டு. பாலின சோதனை போன்ற மருத்துவ பரிசோதனைகளை செய்யக் கூடாது. இந்த விஷயத்தை பெண்களுக்கு எதிரான தாக்குதலாகவே நான் பார்க்கிறேன்.
இதுபோன்ற விஷயங்கள் தொடர்ந்து நடந்தால் எதிர்காலத்தில் நிறைய பெண்கள் விளையாட்டுத் துறைக்கு வருவது கேள்விக்குறியாக இருக்கும். இதற்கு பின் பெண்கள் எப்படி பாதிப்பு அடைகிறார்கள் என்பதை யாரும் யோசிக்காமல் தொடர்ந்து பாலின சர்ச்சை தொடர்பான தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஆனால், ஆண்களுக்கு இதுபோன்ற சோதனை நடத்துவதில்லை.
இந்த உலகத்தில் பிறந்த அனைத்து மனிதர்களையும் சரிசமமாக நாம் பார்க்க வேண்டும். இதனை பொருட்படுத்தாமல் ஒருவர் மனது புண்படும்படி சோதனை என்ற பெயரால் அவரது வாழ்க்கையே வீணகிறது. அனைத்து அரசுகள் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஆண், பெண்ணை சரிசமமாக பார்க்க வேண்டும்.
உளவியல்ரீதியான பாதிப்பு: எனக்கு ஏற்பட்ட உளவியல் பிரச்சனையிலிருந்து தற்போது வரையிலும் மீள முடியவில்லை. இதுபோன்ற பிரச்சனையிலிருந்து அவ்வளவு எளிதாக மீள முடியாது. இதன் பிறகு ஒருவரது வாழ்க்கை மிகபெரிய கேள்விக் குறியாகிவிடும், நிம்மதி இல்லாத வாழ்க்கையாக மாறிவிடும்.