சென்னை: சட்டப்பேரவை விதி 5-ன் கீழ் பேரவை உறுப்பினர்கள் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவை 2025-இன் முதல் கூட்டத்தொடரின், மூன்றாம் நாளான இன்று அதிமுக எம்எல்ஏக்கள் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு சட்டை அணிந்து வந்தனர். மேலும், டங்ஸ்டன் தடுப்போம், மேலூரைக் காப்போம் போன்ற வாசகங்கள் அடங்கிய முகக்கவசத்தை அணிந்து வந்திருந்தனர். இதனையடுத்து தொடங்கிய கேள்வி நேரத்தில், பேரவை உறுப்பினர்கள் முன்வைத்த கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர்.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தை எதிர்கட்சியான அதிமுக ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியன கொண்டுவந்தன. தொடர்ந்து இதன் மீதான விவாதம் தொடங்கியது.
அரசு பொறுப்பேற்க வேண்டும்: எம்.ஆர். காந்தி
அண்ணா பல்கலைகழக பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட மாணவியின் சம்பவத்திற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். மாணவர்களின் பாதுகாப்புக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 'யார் அந்த சார்?' என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு இருக்கிறது. யார் அந்த சார் என்பதை கண்டுபிடிப்பதோடு மாணவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.
பதிவாளர் மீது நடவடிக்கை வேண்டும்: பூவை ஜெகன் மூர்த்தி
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் யார் அந்த சார்? என்பது தெரிய வேண்டும். பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆளுநர் தான் பொறுப்பு! - த.வா.க., வேல்முருகன்
எப்படி முதல் தகவல் அறிக்கை வெளியிடப்பட்டது. இதற்கு தமிழ்நாடு ஆளுநர் தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். ஆளுநர் வரைமுறைகுட்பட்ட வளாகத்தில் நடந்த சம்பவத்தில் ஆளுநர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். யார் அந்த சார் என்ற கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். அதற்கும் ஆளுநருக்கும் பொறுப்பு இருக்கிறது. ஞானசேகரன் யாரிடம் பேசினார் என்பதை நிரூபிக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈ.ஆர்.ஈஸ்வரன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி:
அண்ணா பல்கலைக்கழகம் விவகாரத்தில் யார் அந்த சாராக இருந்தாலும் ஆளுநராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சதன் திருமலைக்குமார், ம.தி.மு.க:
உரிய தண்டனை பெற்று தர காவல்துறை முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. இதற்கு முழுமையாக ஆளுநர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.
மாரிமுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் மாரிமுத்து, அதிர்ச்சியாக உள்ளது; சட்டப்பிடியில் இருந்து யாரும் தப்பிக்கக் கூடாது என்று பேசினார்.
நாகை மாலி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் நாகை மாலி பேசுகையில் தொழில்நுட்ப கோளாறால் எஃப்.ஐ.ஆர் (முதல் தகவல் அறிக்கை) வெளிவந்தது என்பதை ஏற்க முடியாது. கடும் பாதிப்புக்கு உள்ளான அந்த பெண்ணிற்க்கு நீதிமன்ற கூறிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும் என்றார்.
சிந்தனை செல்வன், விசிக
ஆளுநர்தான் முழுமையாக இதற்கு பொறுப்பு. பல்வேறு பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை. கல்வி நிலையங்களில் தாக்குதல் நடைப்பெற்று வருகிறது. ஒட்டுமொத்தமாக நிர்வாகம் பாதிக்கப்கடுவதற்க்கு ஆளுநர் தான் காரணம். இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போராடுபவர்களை கைது செய்யக்கூடாது: பா.ம.க., ஜி.கே.மணி
அண்ணா பல்கலைக்கழகம் விவகாரத்தில் கைது மட்டும் போதாது. அந்த நிகழ்விற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை தேவை. கல்லூரி, பள்ளி வளாகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் காவலர்கள் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இது போன்ற நிகழ்வில் போராட்டம் நடத்த அனைத்து கட்சிகளுக்கும் உரிமை இருக்கிறது. அதற்கு மாறாக போராட்டம் செய்பவர்களை கைது செய்ய கூடாது அதற்கு கண்டனம் தெரிவிக்கின்றனர்.
குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர், "போராட்டம் நடத்த அனுமதி வாங்க வேண்டும். அதற்குரிய இடங்களில் தான் காவல்துறை அனுமதி தரும். அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் வழக்குப் பதிவு செய்யப்படும். போராட்டம் நடத்துவதில் பாகுபாடு இல்லை," என்றார்.