பாங்காக்: மியான்மரின் மேற்கு பகுதியில் சிறுபான்மை இனத்தை சேர்ந்த ஆயுதம் ஏந்திய குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள கிராமத்தில் மியான்மர் ராணுவம் நேற்று தாக்கியதில் 40 பேர் கொல்லப்பட்டதாகவும், 20 காயமுற்றதாகவும் உள்ளூர் அறக்கட்டளை அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
மியான்மரின் மேற்கு பகுதியில் உள்ள ராம்ரீ தீவில் இருக்கும் கியாக் நி மாவ் கிராமத்தின் மீது 8ஆம் தேதியன்று மியான்மர் ராணுவம் வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது. விமானத்தில் இருந்து போடப்பட்ட குண்டுகள் வெடித்ததில் அந்த கிராமத்தில் உள்ள வீடுகள் தீப்பற்றி எரிந்தன. இந்த கிராமம் அரக்கான் என அழைக்கப்படும் பழங்குடியின இனத்தின் ஆயுதம் ஏந்திய குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளது. தாக்குதல் நடந்த பகுதி தொலை தூரத்தில் உள்ள கிராமப் பகுதி என்பதால் மேல் அதிக விவரங்கள் உடனடியாக தெரியவரவில்லை. மேலும் அந்த பகுதிகளில் மொபைல் போன், இணையதளம் வசதிகளும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூ கி ஆட்சி்ககு எதிராக 2021ஆம் ஆண்டு பிப்ரவரியில் ராணுவம் கிளர்ச்சியில் ஈடுப்டடது. அப்போது முதல் மியான்மர் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மியான்மரில் அமைதியாக நடைபெறும் போராட்டங்கள் மீது கூட ராணுவம் தாக்குதல் நடத்துகிறது என்று மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர். மியான்மரின் பெருபாலான பகுதிகள் இப்போது ராணுவ ஆட்சிக்கும், அதற்கு எதிரான குழுக்களுக்கும் இடையே மோதலால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: திருப்பதி நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம்..ஆந்திரா அரசு அறிவிப்பு!
அரக்கான் ஆயுதக்குழுவின் செய்தித் தொடர்பாளர் கைங் துக்கா அசோசியேட் பிரஸுக்கு அளித்த பேட்டியில்,"8ஆம் தேதியன்று பிற்பகல் ஜெட் விமானங்கள் கிராமத்தின் மீது குண்டுகளை வீசின. இதில் குழந்தைகள், பெண்கள் என பொதுமக்கள் 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். மேலும் இந்த குண்டு வீச்சில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன,"என்று கூறியுள்ளார்.
எதற்காக இந்த கிராமத்தை குறிவைத்து ராணுவம் தாக்குதல் நடத்தியது என்ற விவரம் தெரியவரவில்லை. உள்ளூர் அறக்கட்டளை அமைப்பை சேர்ந்தோர் மற்றும் தனிப்பட்ட ஊடகத்தினர் இந்த தாக்குதலை உறுதிப்படுத்தி உள்ளனர். மியான்மரில் கடந்த மூன்று ஆண்டுகளாகவே மக்கள் தற்காப்பு படை, ஆயுதம் ஏந்திய சிறுபான்மை இனக்குழுக்கள் உள்ளிட்டவை தன்னாட்சி கேட்டு போரிட்டு வருகின்றன. மேலும் இந்த இரு குழுக்களும் இணைந்து ராணுவத்துக்கு எதிராக தாக்குதல்களையும் முன்னெடுத்து வருகின்றன. ஜனநாயகத்துக்கு ஆதரவான குழுக்களுக்கு எதிராக ராணுவமும் தாக்குதல் நடத்தி வருகிறது. மியாமரின் பெரிய நகரான யாங்கோனுக்கு வடமேற்கில் 340 கி.மீ தொலைவில் உள்ள ராம்ரீ பகுதியை அரக்கான் ராணுவம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கைப்பற்றியது.