சென்னை: போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார், முன்னாள் உதவியாளர் சண்முகம் உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டள்ளது.
கடந்த 2011- 2015ம் ஆண்டுகளில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் 2,222 பேர் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர். இதில், அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து ஆஜராகி வந்த நிலையில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 2,222 பேரில் கடந்த ஜனவரி 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 150 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு அவர்கள் ஆஜராகி வந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜரானார். மேலும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மேலும் 150 பேருக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை பிப்ரவரி 20 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
குற்றப் பத்திரிகை தாக்கல்:
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த 2024ம் ஆண்டு அமலாக்கத்துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. இந்நிலையில், இந்த வழக்கில் அமலாக்கத்துறை சார்பில் கூடுதல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் தாக்கல் செய்துள்ள கூடுதல் குற்றப் பத்திரிகையில், அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார், முன்னாள் உதவியாளர் சண்முகம் உள்ளிட்ட 13 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.